மூதாட்டி………….
முதியோர் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற நகராட்சி பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்சேரா மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் 30 ஆண்டுகளாகப் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், ரஜோரி மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லத்திலிருந்து ஒரு குழு இவரது குடிசை வீட்டிற்குச் சென்று, உடல்நலக் கோளாறால் இருந்த முதியவரை முதியோர் இல்லத்திற்கு நேற்று அழைத்துச் சென்றுள்ளது.
இந்நிலையில், நகராட்சி பணியாளர்கள் அவரது குடிசையில் கிடந்த குப்பைகளை எடுக்கச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த குடிசை வீட்டின் குப்பைத் தொட்டியில் கரன்சி நோட்டுகள் கவரில் சுற்றி வைக்கப்பட்டுக் கிடந்துள்ளன. ஒரு பையில் 70 முதல் 80 கிலோ எடை கொண்ட நாணயங்களும் இருந்துள்ளன.
இதுகுறித்து அப்பகுதி வார்டு உறுப்பினர் ஒருவர் கூறும்பொழுது, இது மோசடி செய்து கிடைத்த பணமல்ல. அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் இவரிடம் ரூ.10 அல்லது ரூ.20 எனக் கொடுத்து விட்டுச் செல்வார்கள். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் வரை பணம் சேர்த்துள்ளார்.
தனது கடின உழைப்பினாலேயே அவருக்கு இது சாத்தியப்பட்டு உள்ளது. எனினும், எவ்வளவு பணம் உள்ளது என்று எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டரை மணிநேரம் முதல் 3 மணிநேரம் வரை பணம் எவ்வளவு உள்ளது என்று எண்ணியுள்ளோம் எனக் கூறியுள்ளார்.
பணம் மற்றும் நாணயங்கள் சிறு பிளாஸ்டிக் பைகள், கவர்கள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன. சில நோட்டுகள் நனைந்து வீணாகியும் உள்ளன. இதுவரை 2 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது. இன்னும் எவ்வளவு உள்ளது என எண்ண வேண்டும் என்று நகராட்சி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.