டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
டெல்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(வயது77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இருந்தனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (வயது 50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா(வயது 57). மற்றொரு மகள் இங்கு இல்லை.
மூடப்பழக்கவழக்கங்களுக்கு அடிமையான குடும்பம்
வினோதமான மூடப்பழக்கங்களைக் கடைப்பிடித்த இந்தக் குடும்பத்தினர் கடவுளைத் தரிசிக்கப் போகிறோம் என்று எழுதிவிட்டு, தற்கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவர்கள் எழுதிய டைரியில், உடல் தற்காலிகமானது, கண்களையும், வாயையும் மூடிக்கொண்டால் பயத்தில் இருந்து விடுபடலாம் என்று எழுதி வைத்துள்ளனர்.
முக்தி அடைவது குறித்து இறந்து போன தனது தந்தை கூறியதாக லலித் தனது டைரியில் எழுதி வைத்துள்ளார். தூக்கில் தொங்கினால் தங்களை லலித்தின் தந்தையின் ஆன்மா வந்து காப்பாற்றும் என்று அவர்கள் நம்பியுள்ளனர்.
ஒரு டைரியின் கடைசி வாக்கியத்தில் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு கப்பில் தண்ணீர் வைக்கவும், அதன் நிறம் மாறியதும் நான் வந்து உங்களை காப்பாற்றுவேன் என்று இருந்துள்ளளது. இவை அனைத்தும் பொலிசாருக்கு கிடைத்த ஆதாரங்கள்.
முக்தி அடைவதே நோக்கம்! காட்டிக்கொடுத்த சிசிடிவி
சிசிடிவி பதிவுகள் மூலம் வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது
சிசிடிவி பதிவுகளில் நாராயண் தேவி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், 12 வயது த்ருவ், 15 வயது ஷிவம் ஆகியோர் பர்னிச்சர் கடைக்கு சென்று வயர்கள், ஸ்டூல்கள் வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் திட்டமிட்டு தான் இந்த செயலை செய்துள்ளனர்.
அனைவரும் இரவு 1 மணி அளவில் இறந்துள்ளனர். நாராயண் தேவியின் இளைய மகன் லலித் சுந்தாவத்(45) உத்தரவுகள் பிறப்பிக்க அதை குடும்பத்தார் பின்பற்றியது சிசிடிவி பதிவில் தெரிய வந்துள்ளது
5 ஸ்டூல்களை வைத்து அவர்கள் தூக்கு போட்டுள்ளனர். த்ருவ் மற்றும் ஷிவம் ஆகிய சிறுவர்களை அவர்களின் பெற்றோரே கைகளை கட்டி வயரை மாட்டிவிட்டுள்ளனர்.
லலித்தின் மனைவி டினாவின் கைகளும், கண்களும் கட்டப்படவில்லை. அவர் தான் மற்றவர்களின் கைகளை பின்புறமாக கட்டி, கண்களை துணியால் கட்டியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நாராயண் தேவி மட்டும் தரையில் பிணமாகக் கிடந்தார்.
இரவு 10 மணிக்கு மூத்த மருமகள் ஸ்டூல்களை கொண்டு வந்துள்ளார். இரவு 10.15 மணிக்கு த்ருவ், ஷிவம் ஆகயோர் தூக்குப் போடத் தேவையான வயர்களை கொண்டு வந்துள்ளனர். 10.39 மணிக்கு அந்த குடும்பம் ஆர்டர் செய்த 20 சப்பாதி டோர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 10.57 மணிக்கு நாராயண் தேவியின் மூத்த மகன் புவனேஷ் நாயை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
11.04 மணிக்கு புவனேஷும், நாயும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஜூலை மாதம் 1ம் தேதி காலை 5.56 மணிக்கு பால் கார்டன்களை வைத்துவிட்டு டிரக் சென்றுள்ளது. 7.14 மணிக்கு அக்கம் பக்கத்தார் வந்து பார்த்தபோது அனைவரும் இறந்து கிடந்தனர். இது தான் சிசிடிவி பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.