ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படும் இந்த உலகில் தமிழர்கள் படைக்கும் சாதனைகள் எண்ணற்றவை. எல்லா துறைகளிலும் தமது காலடிகளை பதித்து வருகின்றார்கள் தமிழர்கள்.அந்த வகையில் கிரிக்கெட் உலகின் நாயகனாக கொண்டாடப்படுபவர் தமிழரான முத்தையா முரளிதரன்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை கொண்ட முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் வலதுகை சூழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்.1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிறந்த முரளிதரன் நேற்றைய தினம் 46ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.
இவரது பிறந்தாளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடியிருந்ததுடன், இது தொடர்பான பல பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது.இலங்கை கிரிக்கெட் அணி 90களின் காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி கொண்டிருந்த நேரத்தில் தான் முத்தையா முரளிதரன் இலங்கை அணியில் களமிறங்கியிருந்தார்.
தனது ஆரம்ப காலத்தில் சிறப்பாகவே செயல்பட்ட முரளிதரன் தனது கிரிக்கெட் வாழ்க்கை பயணத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் விளையாடிய 23 டெஸ்ட் போட்டிகளில் 81 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.இவ்வாறு தொடர் சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர், தனது 18 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் பல சோதனைகளையும் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பலமுறை இவரது பந்து வீச்சானது ஐசிசியால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதும் தன்னுடைய திறமைக்கான அங்கீகாரத்தை உலகம் வழங்கும் படி செய்தார்.
அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் என்ற மிகப்பெரும் சாதனையை அடைந்து உலகிலுள்ள அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பிக் கொண்டார். அத்துடன் அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 1,300 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் தங்க புதையலாக விளங்கிய முரளிதரன் ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் 2010ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார்.இவ்வளவு சாதனைகளையும் படைத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கட்டுக்களை கைப்பற்றி உலக சாதனை படைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.
இதன் பின்பு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி அனைத்து விளையாட்டுக்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் தற்போது தமிழர்களுக்கான அடையாளமாக மாறியுள்ளார்.