“என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை” மனைவி இறந்த துக்கம்தாளாமல் கணவன் எடுத்த விபரீத முடிவு : உருக்கமான கடிதம்!!

284

கள்ளக்குறிச்சி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹரி கோவிந்தன் (27) என்பவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த கீர்த்திகாவுக்கும் (24) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று மாதம் கீர்த்திகாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் மனமுடைந்த கீர்த்திகா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த ஹரி கோவிந்தன் சக நண்பர்களிடம் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும், கீர்த்திகா இல்லாத உலகத்தில் தான் எப்படி வாழ்வது என்றும் மன வேதனையோடு கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டில் கீர்த்திகா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்ற ஹரி கோவிந்தன் கீர்த்திகாவின் ஆவி தனது உடலில் பற்றிக் கொண்டதாகவும் அதனால் கீர்த்திகாவின் குரலிலேயே தான் கீர்த்திகாவிடம் செல்லப் போவதாகவும் கூறி கதறி அழுதுள்ளார். இதை பார்த்த அவரது சக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து தொடர்ந்து அவர் உணவருந்தாமலும் கீர்த்திகா தன்னைப் பிரிந்து சென்றதால் அவருடனேயே செல்லப் போகிறேன் என்றும் புலம்பியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி ஆகியும் ஹரி கோவிந்தன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் நண்பர்கள் உறவினர்களும் ஹரி கோவிந்தனை பல இடங்களில் தேடி பார்த்தனர்.

இதைத் தொடர்ந்து எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அவரது வீட்டின் அருகிலுள்ள விவசாய கிணற்று பகுதியில் ஹரி கோவிந்தன் அணிந்திருந்த கைலி கிடந்துள்ளது.

இதனை பார்த்த அவரது உறவினர்கள் அந்த கைலியை எடுத்து பார்த்தபோது அதன் கீழே அவரது செல்போனும் கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஹரி கோவிந்தன் உறவினர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறை வீரர்கள் கிணற்றிலிருந்து ஹரி கோவிந்தனை சடலமாக மீட்டனர்.

தொடர்ந்து ஹரி கோவிந்தன் உடலை பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எடைக்கல் போலீசார், ஹரி கோவிந்தன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அப்போது ஹர கோவிந்தன் டைரியில் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.