தூத்துக்குடி………
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான பூபதிராஜா. வீட்டருகே உள்ள தனியார் பவர் பிளான்ட்டில் பணிபுரிந்து கொண்டும், சிறு சிறு எலக்ட்ரிக்கல் வேலைகளை செய்தும் வந்துள்ளார் பூபதிராஜா. கடந்த 22-ஆம் தேதி இரவுநேர பணிக்கு சென்று விட்டு மறுநாள் 23-ஆம் தேதி காலை வீட்டிற்கு வந்தவர், அருகிலுள்ள சிப்பிக்குளத்திற்கு எலக்ட்ரிக்கல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், பூபதிராஜாவின் செல்போனுக்கு பெற்றோர் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை எடுக்காததால் பெற்றோர் அவரை தேட தொடங்கியுள்ளனர்.
அப்போது அதே கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் சென்று பார்த்தபோது, அங்கு பூபதிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார்.
போலீசார் பூபதிராஜாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் “ஆன்லைன் ரம்மி செயலி” இருந்ததும், அடிக்கடி அதில் பூபதிராஜா விளையாடியதும் தெரியவந்தது. பூபதி ராஜா அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டே இருப்பார் என்றும்… நாங்கள் எவ்வளவு கூறியும் சூதாட்டத்தை நிறுத்தவில்லை” என்றும் பூபதிராஜாவின் பெற்றோரும், சகோதரரும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, பூபதி ராஜா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது பெற்றோருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை உருக்கமாக பேசி அனுப்பி உள்ளார்.
என்ன மன்னிச்சிடுமா… நான் ஏகப்பட்ட கடன் வாங்கிட்டேன்.. உன் செயின் ஒன்றையும் 40 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வச்சுட்டேன், ஒன்றரை லட்சம் லோன் வாங்கி விட்டேன், லோன் மாத தவணை தொகையையும், சம்பளத் தொகையையும் ரம்மியில் இழந்து விட்டேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
பூபதிராஜா போல யாரும் ஆன்லைன் ரம்மியால் உயிர் இழக்கக்கூடாது. அதற்கு அரசு உடனடியாக இந்த ஆனலைன் ரம்மியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க பூபதி ராஜாவின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.