என் குடும்பத்தை காப்பாத்துங்க… உயிருக்கு போராடிய நிலையிலும் கதறிய நபர்: வெளியான தகவல்கள்!!

321

கேரளா….

கேரளாவில் தீ விபத்தில் சிக்கிய நபர் ஒருவர், தன்னுடைய குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றுமாறு மீட்புப்படையினரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நிகிலுக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 8 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை, உள்ளூர்நேரப்படி நள்ளிரவில் சுமார் 1.15 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் விரைந்து வந்துள்ளனர், எனினும் 8 மாத குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிகில் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விபத்து குறித்து மீட்புப்படையினர் கூறுகையில், நாங்கள் வந்த போது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

எங்களை பார்த்ததும் குடும்பத்தினரை உடனடியாக காப்பாற்றுமாறு நிகில் கூறினார், அப்படியே மயங்கிவிட்டார். கீழ் தளத்தில் பிரபாதன்- ஷெர்லி இருந்தனர், முதல் தளத்தில் அபிராமியும், குழந்தையும் இறந்து கிடந்தனர்.

வீடு முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டிருந்ததால், புகை வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி அனைவரும் பலியாகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், அவர்களது வீட்டுக்கு வெளியே வாகனம் எரிந்து கொண்டிருந்ததை பார்த்ததும் நிகிலை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அவர் முதல்முறை அழைப்பு எடுத்ததும் விவரத்தை கூறியதாக தெரிவித்துள்ளார், மற்றொரு முறை முயற்சித்து பார்த்தும் போனை எடுக்கவில்லையாம். நிகில் கீழே இறங்கி வந்த போது பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மீட்புப்படையினர் விரைந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களது குடும்பத்தில் சமீபத்தில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.