என் மகன் இவ்வளவு மதிப்பெண் எடுப்பான் தெரிஞ்சிருந்தா குடிச்சிருக்க மாட்டேன் : கதறி அழுத தினேஷின் தந்தை!!

1040

தமிழகத்தில் இவ்வளவு மதிப்பெண் எடுப்பான் என்று தெரிந்திருந்தால், நான் குடித்திருக்கவே மாட்டேன் என்று தினேஷின் தந்தை கதறி அழுதுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலத்தில் தினேஷ் என்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் சமீபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது அவரது தோளில் கிடந்த பையை சோதனையிட்டதில் ஒரு கடிதமும், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் துணிகளும் இருந்தன.

அந்த கடிதத்தில், அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதனால எனக்கு கொள்ளி வைக்காதே.

மொட்டை போடாதே. ஓப்பனா சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாதே. மணி அப்பா (சித்தப்பா) தான் காரியம் பண்ணணும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகியிருந்த நிலையில், தினேஷின் சித்தப்பா மணி, மாமா சங்கரலிங்கம் ஆகியோர் அவரின் பிளஸ் டூ ரிசல்ட்டை பார்த்துள்ளனர். அதில் தினேஷ் 1024 மதிப்பெண் எடுத்திருந்தார்.

இந்நிலையில் தினேஷின் தந்தை, தன் மகன் எடுத்திருந்த மதிப்பெண்ணை பார்த்து என் மகன் இவ்வளவு மதிப்பெண் எடுப்பான் எனத் தெரிந்திருந்தால் நான் குடித்திருக்கவே மாட்டேன்.

குடும்ப பிரச்சனையிலும் இவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறானே, நான் நல்லா இருந்திருந்தால் அவன் இன்னும் நல்லா படித்திருப்பான். என் மகனை நானே கொன்றுவிட்டேனே. அவன் மருத்துவர் கனவையும் நானே சிதைத்துவிட்டேன் என்று கதறி அழுதுள்ளார்.