கனடா…
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஆஷ்லீ (Ashley Wadsworth) என்ற இளம்பெண்ணுக்கு 12 வயதே இருக்கும்போது, இணையத்தில் ஜாக் (Jack Sepple) என்ற 15 வயது பிரித்தானிய சிறுவனை சந்தித்திருக்கிறார். காதல் என்றால் என்ன என்று கூட தெரியாத வயதிலேயே பிள்ளைகளுக்குள் காதல் பற்றிக்கொண்டது.
இப்படியே இணையம் வாயிலாக காதல் வளர்ந்திருக்கிறது. ஆஷ்லீ ஏழு ஆண்டுகளாக உருகி உருகி ஜாக்கை காதலித்துக்கொண்டிருக்க, அவரோ வேறு பல பெண்களைக் காதலித்திருக்கிறார்.தனக்கு 18 வயது ஆனதும், கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி, ஜாக்குடன் வாழ்வதற்காக இங்கிலாந்துக்கு வந்திருக்கிறார் ஆஷ்லீ.
ஆனால், இங்கிலாந்துக்கு வந்தபின் ஜாக் தன்னை நடத்திய விதத்தைப் பார்க்கும்போது, இப்போது இருப்பது இத்தனை ஆண்டுகள் உருகி உருகி இணையம் வழியாக தான் காதலித்த ஜாக் இல்லை என்பது ஆஷ்லீக்கு புரிந்திருக்கிறது.
ஆகவே, கனடாவுக்குத் திரும்ப முடிவு செய்திருக்கிறார் ஆஷ்லீ. தன் தாயிடம், தான் கனடா திரும்ப விரும்புவதாக கூறிவிட்டு, பிப்ரவரி மாதம் 3ஆம் திகதிக்கு விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்திருக்கிறார் அவர்.
ஆனால், ஆஷ்லீ தன்னை விட்டுவிட்டுப் போய்விட்டால், அதன் பிறகு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கமாட்டார் என்பதை உணர்ந்துகொண்ட ஜாக், ஆஷ்லீயுடன் சண்டையிட்டிருக்கிறார்.
அக்கம்பக்கத்தில் வாழ்பவர்கள் சண்டையிடும் சத்தத்தைக் கேட்டிருக்கிறார்கள். இதற்கிடையில், ஜனவரி 30 அன்று தன் தோழி ஒருவருக்கு, ‘அவசரம், உதவி தேவை’ என குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார் ஆஷ்லீ. பின்னர் ஆஷ்லீயின் மொபைலிலிருந்து பிரச்சினை தீர்ந்துவிட்டது என ஒரு செய்தி வரவே, சந்தேகமடைந்த அந்த தோழி பொலிசாருக்கு தகவலளித்திருக்கிறார்.
பிப்ரவரி 1ஆம் திகதி, பொலிசார் ஆஷ்லீயும் ஜாக்கும் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, இரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்திருக்கிறார் ஆஷ்லீ. அப்போது வீட்டிலிருந்த ஜாக், தான் ஆஷ்லீயைக் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொன்றதாக தெரிவித்துள்ளார்.
மகளை இழந்த பெற்றோர் கதறுகிறார்கள். ஆஷ்லீ பிரித்தானியாவுக்குச் செல்வதாக கூறியபோதே நான் அவளைத் தடுத்தேன். ஆனால், நான் பெரிய பெண்ணாகிவிட்டேன் என்று சொல்லி என்னை மீறி அவள் சென்று விட்டாள். ஒரே நிம்மதி, கடைசியாக அவளிடம் பேசும்போது, நான் அவளை நேசிக்கிறேன் என்று கூறினேன் என்பதுதான் என கண்ணீருடன் கூறுகிறார் ஆஷ்லீயின் தந்தை. என்ன செய்வது ஒன்லைன் காதல் ஆஷ்லீயின் கண்ணை மறைத்துவிட்டதே!