ஒசாமா பின்லேடனின் சொத்து மதிப்பு எவ்வளவு?

720

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் உலகத்தையே உலுக்கினார் ஒசாமா பின்லேடன்.

சவுதியில் கோடீஸ்வரர் Mohammed bin Laden என்பவருக்கு 1957ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி மகனாக பிறந்த பின்லேடன், சிறு வயதிலேயே இஸ்லாமிய மதக் கோட்பாடுகள் மீது தீவிரப் பற்று கொண்டு வளர ஆரம்பித்தார்.

இவரது தந்தைக்கு 22 மனைவிகள். அந்த மனைவிகளுக்கு 52 குழந்தைகள் இருந்தனர். இதில், 10 வது மனைவி அமிதியா அல் அட்டாசு என்பவருக்கு ஒரே மகனாக பிறந்தார் பின்லேடன்.

தன்னுடைய தந்தை மூலம் இவருக்கு கிடைத்த சொத்து 25–30 மில்லியன் டொலர் ஆகும். இதனை வைத்து, தீவிரவாத அமைப்புகளுக்கும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கும் பணம் கொடுத்து உதவத் தொடங்கினார்.

1988-ம் ஆண்டு அவர் அல் கொய்தா என்னும் தீவிரவாத அமைப்பைத் தொடங்கினார் பின்லேடன். இதன் காரணமாக அவரது சவுதி குடியுரிமை பறிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார்.

1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தலிபான்களையும், அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டவர்களையும் பாதுகாக்க பின் லேடன் பணம் கொடுத்தார்.

அல் கொய்தா இயக்கத்தின் தலைவராக இருந்தபோது இவரது சொத்துமதிப்பு, 50 மில்லியன் டொலர் என கூறப்பட்டது. தனது அமைப்புக்கு தேவையான ஆயுதங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை விற்பனை செய்வதன் மூலம் இவருக்கு வருவாய் கிடைத்தது.

ஆரம்பத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக ஒசாமா பின் லேடன் நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா, சவுதிகளின் நிதியுதவியைக் கோரிப் பெற்றுத் தந்தது.

அமெரிக்காவின் ரீகன், மற்றும் புஷ் தலைமையிலான அரசுகள் ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாக நிதியுதவி அளிக்கும்படி சவுதிகளை ஊக்குவித்தும் மற்ற நாடுகளை ஒசாமாவுக்கு உதவும்படி அழுத்தம் கொடுத்தும் வந்தன.

இதன் மூலம் கிடைத்த பணத்தினை வைத்து தனது அல்கொய்தா படையை ஊக்குவித்தார். செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு சில ஆண்டுகள் பின் லேடன் சர்வதேச அளவில் புகழ் பெற்றார்.

இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஈரான் மற்றும் சவுதியை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சமீபத்தில் நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.