இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ரயில் பயணியின் ஒற்றை டுவீட் மூலம், கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5ம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது. முசாபர்நகர்-பந்த்ரா இடையேயான அவாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்5 பெட்டியில் பயணித்த ஒருவர், சுமார் 25 சிறுமிகள் அழுது கொண்டு இருந்ததை பார்த்துள்ளார். இதனால் அவருக்கு இது கடத்தலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் உடனடியாக தனது டுவிட்டர் கணக்கில் இருந்து ரயில்வே அமைச்சருக்கான ட்விட்டர் ஐடி, அத்துறை அமைச்சரான பியூஷ் கோயலின் தனிப்பட்ட ஐடி, பிரதமர் மோடியின் ட்விட்டர் ஐடி, ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா உள்ளிட்டோருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அதில் “நான் அவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 5வது பெட்டியில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். இந்த பெட்டியில் சுமார் 25 சிறுமிகள் உள்ளனர்.அனைவருமே பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாக தெரிகிறது. சிலர் அழுது கொண்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைதொடர்ந்த மற்றொரு பதிவில், ஆள் கடத்தல் போல தென்படுகிறது. இப்போது இந்த ரயில் ஹரிநகரில் உள்ளது. அடுத்த ஸ்டேஷன் பாககா, அதற்கு அடுத்த ஸ்டேஷன் கோரக்பூர். தயவு செய்து இவர்களுக்கு உதவுங்கள். இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில், வடக்கு ரயில்வேயின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அவருக்கு பதில் வந்தது.அதில் ஜிஆர்பி (Government Railway Police) ட்விட்டர் ஐடியை அலர்ட் செய்து, இதுகுறித்து விசாரிக்க கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இதையடுத்து ஜிஆர்பி படையினர் ரயில் பெட்டியில் சோதனை நடத்தியதாக தெரிகிறது. ஏனெனில் சற்று நேரத்தில், ஆதர்ஷ் ஸ்ரீவத்சா மறுபடியும் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், “உங்கள் விரைவான நடவடிக்கைக்கு நன்றி சார். நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 26 சிறுமிகளை மீட்ட பொலிசார், அவர்களை கடத்திச் சென்ற 22 மற்றும் 55 வயதான இரு ஆண்களை, கைது செய்துள்ளனர்.
அனைவருமே பீகாரின் மேற்கு சம்பரன் பகுதியை சேர்ந்தவர்கள். இட்கா பகுதிக்கு சிறுமிகள் கடத்தப்பட்டுக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமிகள் தற்போது குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் அனைவரின் வயதுமே 10 முதல் 14க்கு உட்பட்டதாகும்.
சிறுமிகளின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு டுவிட்டர் பதிவு மூலம் 26 சிறுமிகளின் வாழ்க்கையை காப்பாற்றிய ஆதர்ஷ் ஸ்ரீவத்சாவுக்கும், நடவடிக்கையை விரைந்து எடுத்த ரயில்வே அமைச்சகம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.