தமிழகத்தில் கார்கள் மோதிக்கொண்டதில், கணவன்- மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம், சின்ன காஞ்சீபுரம் திருமலை நகரை சேர்ந்தவர் எஸ்.ஆர்.மோகன்(36). இவரது மனைவி லட்சுமி, மகள்கள் பவித்ரா, நவீதா மற்றும் மகன் வரதராஜன் ஆவர்.
கைத்தறி பட்டுப்புடவை உற்பத்தி தொழில் செய்து வந்த மோகன், தனது பிள்ளைகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கேரளாவிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார்.
அதன்படி, தனது குடும்பத்தினர் மற்றும் அக்கா கணவர் முரளி, மற்றொரு அக்காவின் மகள் மேகலா ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளார்.
இவர்களுடன் கார் ஓட்டுநர் பிரபாகரன்(36) மற்றும் மாற்று ஓட்டுநர் பூபதி ஆகியோரும் பயணித்தனர். கார் நள்ளிரவில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் நான்கு சாலை அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிர்திசையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, சாலையின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்திலேயே மோகன் குடும்பத்தினரின் கார் மீது விழுந்தது.
இதனால் பலத்த சேதமடைந்த மோகனின் காரில் இருந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஓட்டுநர் பூபதி மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் மேலும் ஒரு கார் மீது மோதியதில், அந்த காரில் இருந்த 4 பேர் காயமடைந்தனர். பின்னர், இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி வழியாக சென்றவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பாதி வழியிலேயே பூபதி உயிரிழந்தார்.
இந்த கோர விபத்தினால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.