கேரள…
பலரும் தங்களது கல்லூரி படிப்பிற்கு பிறகு, தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் வேலைக்கு செல்ல முயல்வார்கள். அதே வேளையில் மற்ற சிலர், அரசு தேர்வில் சேர வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு, அரசு தேர்வுகளுக்காக தயாராகவும் செய்வார்கள். இதில், சிலர் ஒன்றிரண்டு முயற்சிகளில் தேர்ச்சி அடைந்து வேலை கிடைத்தாலும், மற்ற பலருக்கு அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்ளும்.
இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த தாய் – மகன் ஆகிய இருவரும் அரசு தேர்வுக்கு தயாரான நிலையில், பின்னர் நடந்த சம்பவம் சபாஷ் போட வைத்துள்ளது. கேரள மாநிலம், மலப்புரத்தை அடுத்த அரிகோடு என்னும் பகுதியை சேர்ந்தவர் பிந்து. இவரது மகன் பெயர் விவேக். இவர்கள் இருவரும் சமீபத்தில், அரசு பணியாளர் தேர்வை எழுதி ஒன்றாக எழுதி உள்ளனர்.
எழுதியதுடன் மட்டுமில்லாமல், இருவரும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தற்போது அரசு பணியிலும் அவர்கள் சேர உள்ளனர். தாய் பிந்துவுக்கு கடைநிலை ஊழியர் பிரிவிலும், மகன் விவேக்கிற்கு கீழ்நிலை ஊழியர் பிரிவிலும் வேலை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே விரைவில் அரசு பணியில் சேரப் போகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக, அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வரும் பிந்து, மகன் விவேக் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அவரது புத்தகங்களை மகனுடன் சேர்ந்து வாசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி மகனின் புத்தகங்களை படித்ததே பிந்துவை அரசு தேர்வுக்கு தயாராக தூண்டி உள்ளது. இதன் பின்னர் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து பிந்து படிக்க ஆரம்பித்துள்ள நிலையில், மகனின் கல்லூரி படிப்பிற்கு பின்னர் அவரையும் சேர்த்துள்ளார். முதலில் மூன்று, நான்கு முறை அரசு பணியாளர் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் இருந்து வந்த பிந்து, தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார்.
அங்கன்வாடி பணி நேரம் போக, தனக்கு மீதம் இருக்கும் நேரத்தில் பிந்து படித்து வந்த அதே வேளையில், மகன் விவேக் தனியாக படிக்கவே பெரிதும் விரும்பி உள்ளார். இருவரும் தனியாக படித்து வந்தாலும், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் முக்கியமான தலைப்புகள் தொடர்பாக அவர்கள் மாறி மாறி விவாதிக்கவும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரே வீட்டில் இருந்து தாயும், மகனும் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று, ஒரே நேரத்தில் அரசு பணியில் சேர உள்ள சம்பவம் பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. இந்த தாய் – மகன் காம்போவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.