கன்னியாகுமரி….
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில் புரத்தைச் சேர்ந்த சுஜா (45) என்பவருக்கும் திருமணம் நடந்தது. முதல் கணவனின் கொடுமையால் அவரை பிரிந்து விஜயகுமாரை இரண்டாவதாக சுஜா திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது திருமணத்திற்கு பின்பு வாழ்வை மகிழ்ச்சியோடு நகர்த்தலாம் என எண்ணியிருந்த சுஜாவுக்கு, இரண்டாவது கணவரும் முதல் கணவரை விட கொடூரமானவராக காணப்பட்டார்.
கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 23-ந்தேதி விஜயகுமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.
அப்போது அவர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் மனைவியை சரமாரியாக தாக்கினார்.
இதில் சுஜா மயங்கி கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது உறவினர் ஜஸ்டின் பால் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் விஜயகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சுஜா பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பலியான சுஜாவின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.