சேலம்….
சேலத்தில் தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்ற மனைவி, சடலத்தை அப்புறப் படுத்த வழி தெரியாமல் ஒரு வார காலம் தண்ணீர் டிரம்முக்குள் போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சேதுபதி – பிரியா தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை, 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள். சேதுபதி இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்த நிலையில், கட்டிட வேலை, வீட்டு வேலை என பிரியா கிடைத்த வேலைகளுக்குச் சென்று வந்துள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக சேதுபதியைக் காணாத நிலையில், வெளியூர் சென்றிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் நினைத்திருந்தனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பிரியாவும் அவருடைய ஆண் நண்பனான சதீஷ்குமார் என்பவனும் தண்ணீர் நிரப்பப் பயன்படும் டிரம் ஒன்றை சைக்கிளில் வைத்து, அருகிலுள்ள மயானம் நோக்கி மெதுவாக தள்ளிக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது வீசிய கடும் துர்நாற்றம் அரைகுறை தூக்கத்தில் இருந்த அக்கம்பக்கத்தினர் சிலரை எழுப்பி இருக்கிறது.
தூக்கம் கலைந்து எழுந்து வந்தவர்கள் மூக்கைப் பொத்தியவாறே, டிரம்முக்குள் என்ன இருக்கிறது என பிரியாவிடம் கேட்டுள்ளனர். பிரியாவும் சதீஷ்குமாரும் பேந்தப் பேந்த விழிக்கவே, ஊர் மக்களே டிரம்மைத் திறந்து பார்த்துள்ளனர்.
உள்ளே அழுகிய நிலையில், சேதுபதியின் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பிரியாவிடமும் சதீஷ்குமாரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டு வேலை செய்து வந்த பிரியாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. சேதுபதி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வரும் சதீஷ்குமாரும் பிரியாவும் தனிமையைக் கழித்துள்ளனர். ஒரு நாள் இந்த விவகாரம் தெரியவந்து மனைவியைக் கண்டித்துள்ளார் சேதுபதி. அதன் பின்னரும் பிரியா – சதீஷ்குமார் இடையிலான உறவு நீடிக்கவே, மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடிக்கத் தொடங்கியுள்ளார் சேதுபதி.
கடந்த 17ஆம் தேதி இரவு மகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பிய பிரியா, வழக்கம்போல் சதீஷ்குமாருடன் தனிமையில் இருந்துள்ளார். அந்த நேரம் பார்த்து போதையோடு வந்த சேதுபதி, இருவரையும் ஒன்றாகப் பார்த்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று சண்டையிட்டுள்ளார். அப்போது சதீஷ்குமாரும் பிரியாவும் சேர்ந்து விறகு மற்றும் கட்டைகளைக் கொண்டு சேதுபதியைத் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்திருக்கிறார் என்கின்றனர் போலீசார்.
சேதுபதியின் உடலை அப்புறப்படுத்த எண்ணியபோது இரண்டு சிக்கல்கள் எழுந்துள்ளன. ஒன்று இவர்களது வீடு இருக்கும் பகுதி ஏராளமான வீடுகள் இருக்கும் நெருக்கடியான குடியிருப்புப் பகுதி என்பதால், ஆட்கள் நடமாட்டம் எப்போதும் காணப்படும்.
மற்றொன்று, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கொலை வழக்கில் சிறை சென்றுவிட்டு ஜாமீனில் வெளிவந்திருந்ததால், பழிக்குப் பழி கொலை சம்பவங்கள் அரங்கேறலாம் என்ற சந்தேகத்தில் ஊரைச் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சேதுபதியின் உடலை வெளியே கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வேறு வழியின்றி இருவரும் சேர்ந்து வீட்டிலிருந்த தண்ணீர் டிரம்முக்குள் சேதுபதியின் உடலைக் கிடத்தி, மூடி வைத்துள்ளனர்.
சடலத்தை அப்புறப்படுத்தும் வழி ஒரு வாரம் கடந்தும் பிடிபடாத நிலையில், உடல் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதற்கு மேலும் உடலை வீட்டில் வைத்திருக்க முடியாது என எண்ணிய பிரியா, சதீஷ்குமாரை போன் செய்து வரவழைத்து சேதுபதியின் சடலத்தை டிரம்மோடு சைக்கிளில் வைத்து அருகிலுள்ள மயானத்துக்குத் கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
சதீஷ்குமாரையும் பிரியாவையும் போலீசார் கைது செய்துவிட்ட நிலையில், சேதுபதி – பிரியா தம்பதியின் 7 வயது மகளும் 10 மாத ஆண் குழந்தையும் நிர்கதியாகியுள்ளனர்.