ஈரோடு…
ஈரோட்டில் கணவர் மதுப்பழக்கத்தை கைவிடாததால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுவிதா (24). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
லோகநாதன் டாஸ்மாக் குடோனில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். திருமணத்துக்கு பின் இருவரும் ஓங்காளியம்மன் கோவில் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே, லோகநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை கைவிடும்படி சுவிதா வலியுறுத்தி வந்துள்ளார்.
மேலும், மதுப் பழக்கத்தை கைவிடக் கோரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் வைத்து கணவர் லோகநாதனின் கையில் கயிறு கட்டிவிட்டுள்ளார். சில நாட்கள் மது அருந்தாமல் இருந்த லோகநாதன், நேற்றிரவு மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால், மனமுடைந்த சுவிதா, நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை லோகநாதன் கண்விழித்த போது, சுவிதா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.
தகவல் அறிந்த வீரப்பன் சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, சுவிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் சுதா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.