தமிழகத்தில், கணவரை இழந்த பெண்களை குறிவைத்து ஏமாற்றிய, கோவையைச் சேர்ந்த புருஷோத்தமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த, ‘மெட்டி ஒலி’ எனும் திருமண தகவல் மையத்தில் கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்ய தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியானது.
அதனைத் தொடர்ந்து, அந்த மையத்தை தொடர்பு கொண்ட பெண்களிடம் புருஷோத்தமன்(53) என்ற நபர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தனக்கு இருப்பதாக கூறியுள்ளார்.
அதன் பின், அப்பெண்களை திருமணம் செய்துவிட்டு அவர்களிடம் இருக்கும் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம் புருஷோத்தமன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தமிழ்நாட்டு பெண்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களையும் இவ்வாறு ஏமாற்றியுள்ளார் என்பது தெரிய வந்தது.
மேலும் பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திரா, கொல்கத்தா ஆகிய மாநிலங்களில் புருஷோத்தமன் வங்கி மோசடியிலும் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சென்னை, கோவை நீதிமன்றங்களில் பல மோசடி வழக்குகளில் இவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.
ஆனால், அதையும் மீறி புருஷோத்தமன் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்ததால், கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா புருஷோத்தமனை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆணையை சிறைக்கு அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, புருஷோத்தமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.