கல்லூரி மாணவி மர்ம மரணம்…வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நீடிக்கும் மர்மம்!!

291

திருவள்ளூர்…

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது.

இங்கு வருபவர்களுக்கு தோஷம் கழிக்கவும், திருமண வரம் வேண்டி வரும் பெண்களுக்கு சிறப்பு பூஜைகளையும் முனுசாமி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இந்த ஆசிரமத்தில் சேம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் – நிர்மலா தம்பதியின் மகள் ஹேமமாலினி (20) என்ற கல்லூரி மாணவிக்கு முனுசாமி தோஷம் கழிக்கும் பூஜைகளை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று பூஜை முடிந்த பிறகு மாணவி ஹேமமாலினி முனுசாமியின் வீட்டில் உறங்கியுள்ளார். இந்நிலையில், அதிகாலை ஹேமமாலினி வாந்தி எடுத்துவிட்டு மூச்சி பேச்சின்றி மயங்கி விழுந்துள்ளார். உடனே, சாமியாரின் மனைவி உறவினர்களிடம் ஓடி வந்து, ஹேமமாலினி பூச்சி மருந்தை குடிச்சிட்டதாக தெரிவித்துள்ளார்.

பதறி அடித்து சென்ற உறவினர்கள் முனுசாமியிடம் ஆம்புலன்சுக்கு போன் செய்யுங்கள் என கூறியுள்ளனர். ஆனால் , முனுசாமி அதை காதில் வாங்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். என்ன நடந்தது என்று உறவினர்கள் ஹேமமாலினியிடம் கேட்டபோது, அவர் முனுசாமியை கை காட்டியுள்ளார். அப்போது, ஹேமமாலினியின் தலையை முனுசாமி இழுத்து பிடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமமாலினி அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சாமியார் முனுசாமியை கைது செய்து இப்போது வரை விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும், ஆசிரமத்திற்கு சீல் வைக்கக்கோரி பொதுமக்களும் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

போலீஸ் விசாரணையில் அதிருப்தி அடைந்த நிலையில் மகளின் மணத்துக்கு பின்னால் ஒளிந்துள்ள காரணத்தை கண்டுபிடிக்க கோரி மாணவியின் பெற்றோர் முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தனர்.

அதன்படி, மாணவியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் சத்யபிரியா தகவல் தெரிவித்துள்ளார்.