காதலனால் கைவிடப்பட்ட காதலி: விரக்தியில் செய்த செயல்!!

389

தமிழ்ச்செல்வன்…

கல்யாண மாப்பிள்ளை முறுக்கில் பட்டு வேட்டி சட்டையுடன் நிற்கும் இவர் தான் எஸ்கேப் மாப்பிள்ளை தமிழ்ச்செல்வன்..! அருகில் பட்டுச்சேலையுடன் பவ்வியமாக நிற்பவர் கடலூர் புதுவண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பட்டதாரியான மணப்பெண் கலைச்செல்வி..!

கலைச்செல்வியை காதல் வலையில் வீழ்த்திய கையோடு , கடந்த ஒரு வருடமாக ஊர் ஊராய் அழைத்துச்சென்று தமிழ் செல்வன் எல்லைமீறி காதல் டூயட் பாடிய விபரீதத்தின் விளைவாய் கலைச்செல்வி கர்ப்பிணியானதாக கூறப்படுகிறது. கர்ப்பிணியானதால், வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறி காதலியை கழட்டிவிட்ட தமிழ்ச்செல்வன் மீது கலைச்செல்வி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரிடம், தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று செண்டிமெண்டாக கதை அளந்துள்ளார் தமிழ்ச்செல்வன் . மகனின் இந்த காதல் வாழ்க்கையை அறிந்த பெற்றோர் அவரைக் கைது செய்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்ததோடு, இருவரின் திருமணத்துக்கும் சம்மதித்துள்ளனர்.

இருந்தாலும் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து முறுக்கிய எஸ்கேப் மாப்பிள்ளை தமிழ் செல்வனிடம், பலாத்கார வழக்கில் சிறைக்கு செல்ல தயாராய் இருக்கும் படி போலீசார் கூறியதும், மிரண்டு போன தமிழ்…. திரு நிறை செல்வனாக திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததால் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவிலில் வைத்தே அவர்களுக்கு திருமணம் நடந்தது.

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் மகளிர் போலீசார் தங்கள் சொந்த பணத்தில் புது புடவை, வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்து மாலை வாங்கி வந்து கொடுத்தனர். அங்கு கெட்டி மேளத்திற்கு பதிலாக கைதட்டு மேளம் முழங்க கலைச்செல்வி கழுத்தில் தமிழ்ச்செல்வன் தாலிகட்டினார்..!

பின்னர் போலீசார் வந்து மாப்பிள்ளைக்கு வார்த்தைகளால் வேப்பிலை அடித்ததால் பெற்றோர் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றார் புதுமாப்பிள்ளை.!

பின்னர் கோவிலை சுற்றிவர இருவரும் ஜோடியாக சென்ற நிலையில், மணப்பெண்ணை தனியாகவிட்டு மாப்பிள்ளை மட்டும் தனியாக வந்தார். அருகில் நின்ற பெண் போலீஸ் ஒருவர், மணமகன் தமிழ் செல்வனுக்கு புத்தி சொல்லி அனுப்பிவைத்தார்

கழுத்தில் போட்டிருந்த மாலையை கழற்றி விட்டு காவல் நிலையத்தில் இருந்து அழாதகுறையாக காதல் மனைவியை கூட்டிச்சென்றார் எஸ்கேப் மாப்பிள்ளை தமிழ்ச்செல்வன்

காதலி புகாரில் காதலன் மீது ஆசைவார்த்தை கூறி ஏமாற்றினார் என்று வழக்கு போட்டு இருவரது வாழ்க்கையையும் சீரழிப்பதை விட , இருவரையும் அழைத்து பேசி, முறைப்படி கவுன்சிலிங் செய்து பெற்றோர் முன்னிலையில் மணம் முடித்து வைத்து வாழ்வில் புதிய ஒளியை ஏற்றி வைத்து உள்ளனர் மகளிர் போலீசார்..!