மதுரை….
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது திடீர் நகர் என்னும் பகுதி. இதனை அடுத்துள்ள பாஸ்கரதாஸ் நகர், வடக்கு மெயின் ரோட்டில் வசித்தவர் ராமச்சந்திரன். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு சிவபிரசாந்த் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் சடையாண்டி. இவரது மகள் பெயர் சினேகா. இவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சினேகாவும், சிவபிரசாந்தும் ஒரே பகுதியில் வசித்து வருவதால், அடிக்கடி சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இடையே இருந்த பழக்கம், நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து, சினேகா – சிவபிரசாந்த் காதல் விவகாரம், இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது.
இரண்டு குடும்பமும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இளம் ஜோடியின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், தங்கள் காதலில் இருவரும் மிக உறுதியாக இருந்துள்ளனர்.
இதனிடையே, திடீரென வீட்டில் இருந்த சினேகா மாயமாகியுள்ளார். அவரை சடையாண்டி மற்றும் உறவினர்கள் தேடி வந்த நிலையில், சினேகா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அப்படி இருக்கும் போது தான், நேற்று பகல் சுமார் 12 மணியளவில், தனது தந்தைக்கு அழைத்து பேசியுள்ளார் சினேகா. தன்னுடைய காதலன் சிவபிரசாந்தை பிரிய முடியாது என்றும்,
அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், சினேகா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மகளின் முடிவால் அதிர்ச்சி அடைந்த சடையாண்டி, திருமணத்தை ஏற்க மறுத்துள்ளார்.
இதன் பிறகு, திடீர்நகர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளது. அப்போது, இரு வீட்டாரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர் போலீசார். ஆனால், சடையாண்டி இதற்கு மறுப்பு தெரிவித்து, மகளுக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என கூறிச் சென்றதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், சிவபிரசாந்தின் தந்தை ராமச்சந்திரன், திருமணத்தை ஏற்றுக் கொண்டதையடுத்து, புதுமண தம்பதிக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்றும் எழுதி கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு சுமார் 12 மணியளவில், பெரியார் பஸ் நிலைய பகுதிக்கு ராமச்சந்திரன் வந்துள்ளார். சடையாண்டியும் அந்த வேளையில் அங்கு வர, நீ எப்படி திருமணத்தை ஏற்றுக் கொள்ளலாம் என ராமச்சந்திரனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
மகளின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டீர்கள் என்றும் சடையாண்டி, தகராறு செய்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்த சடையாண்டி, ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ராமச்சந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க முயன்ற நிலையில், அதற்குள்ளாக ராமச்சந்திரன் உயிரிழந்து விட்டார் என கூறப்படுகிறது.
இது பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராமச்சந்திரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், சடையாண்டியை கைது செய்தனர்.