கேரளா…..
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்வதி என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரசவமாகியிருக்கிறது.
குழந்தை பிறந்ததற்கு பிறகு மருத்துவமனையிலேயே அஸ்வதிக்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 6ம் தேதி டாக்டர் உடையில் வந்த பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி குழந்தையை எடுத்துச் சென்றிருக்கிறார்.
வெகுநேரமாகியும் குழந்தையை அந்த பெண் திரும்ப கொண்டு வராததால் சந்தேகமடைந்த அஸ்வதி அங்கிருந்த மருத்துவர்களிடம் விசாரித்திருக்கிறார். அப்போதான் வந்தது மருத்துவரே இல்லை என்பதும் குழந்தையை திருடிச் சென்றிருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து உடனடியாக அருகே இருந்த போலிஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புகாரின் கீழ் குழந்தையை திருடிச் சென்ற பெண்ணை தேடும் படலத்தில் போலிஸார் இறங்கினர்.
இதனிடையே, கோட்டயம் மருத்துவமனைக்கு அருகே உள்ள ஓட்டலில்தான் அந்த பெண் தங்கியிருந்திருக்கிறார். குழந்தையுடன் தான் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றவர் ரிசப்ஷனுக்கு போன் செய்து 3 நாளே ஆகிய தன்னுடைய குழந்தைக்காக வேறு மருத்துவமனையில் செல்ல வேண்டும். டாக்ஸி ஏற்பாடு செய்யுமாறு கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஓட்டல் பெண் ஊழியரும் அருகே இருந்த டாக்ஸி டிரைவைரை அழைத்து விஷயத்தை தெரிவிக்க அந்த பெண் கூறிய தகவல்களும் மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு சந்தேகமடைந்திருக்கிறார். ரிசப்ஷனிஸ்டிடமும் சந்தேகத்தை கூற அவர் ஓட்டல் மேனேஜருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஓட்டல் மேனேஜர் போலிஸுக்கு துப்பு கொடுக்க உடனடியாக அங்கே விரைந்த போலிஸார் ஓட்டலில் தங்கியிருந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்டு அஸ்வதியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதன் பிறகு குழந்தையை கடத்திய பெண்ணை கைது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் திடுக்கிடும் தகவலே வெளிவந்துள்ளது. என்னவெனில், குழந்தையை திருடிய பெண்ணின் பெயர் நீதுராஜ் (33).
திருவல்லாவை பகுதியைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் இருக்கிறது. துபாயில் கணவர் வேலை செய்து வரும் நிலையில் நீதுராஜுக்கு டிக் டாக் மூலம் கொச்சி களமசேரியைச் சேர்ந்த இப்ராஹிம் பாதுஷாவுடன் (35) நெருக்கமான பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இப்ராஹிமுக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லாததால் அவருக்கு நகை பணம் என 30 லட்சம் வரை செலவு செய்திருக்கிறாராம் நீதுராஜ். இந்நிலையில் கருவுற்ற நீதுராஜ் இப்ராஹிமிடமும் அவரது குடும்பத்தினரிடமும் விவரத்தை கூறியிருக்கிறார். ஆனால் எப்படியோ கரு கலைந்துவிட்டது. அதனை இப்ராஹிமிடம் இருந்து மறைத்திருக்கிறார் நீதுராஜ்.
இதனிடையே இப்ராஹிமிற்கு வேறு பெண்ணுடன் திருமண வேலைகள் ஜோராக நடைபெற்றிருக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என எண்ணிய நீதுராஜ் கோட்டயத்தில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் இருந்து டாக்டர் கோட் வாங்கி மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், அந்த குழந்தையுடன் செல்ஃபி எடுத்து இப்ராஹிமிற்கு அனுப்பியும், நமக்கு பிறந்த குழந்தை எனக் கூறி வீடியோ காலிலும் பேசியிருக்கிறார் நீதுராஜ். அப்போது சிகிச்சைக்காக கோட்டயம் வந்ததாகவும் மீண்டும் கொச்சி திரும்ப இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அப்போது டாக்ஸி மூலம் குழந்தையுடன் கொச்சி புறப்படுவதாக இருந்த சமயத்தில்தான் போலிஸாரிடம் சிக்கியிருக்கிறார். இதேபோல நீதுராஜின் காதலனாக இருக்கும் இப்ராஹிம் பாதுஷாவையும் போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.