திருவள்ளூர்……
திருவள்ளூர் அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் 37 வயதான திலகா. இவருக்கு 15 வயதில் உஷா என்ற மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். சிறுமி உஷா பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அதே பகுதியில் மூக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்ற 19 வயது இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பிரவீன் அடிக்கடி சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், சிறுமியை அழைத்து சென்று மது ஊற்றிக் கொடுத்து தனது சக நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் சிறுமி உஷா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ப்ரவீனை வற்புறுத்தியுள்ளார். அச்சிறுமியை தனியாக அழைத்து சென்ற பிரவீன், தனது நண்பன் ரஞ்சித்துடன் சேர்ந்து மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து தலையில் கல்லால் தாக்கியும், கழுத்தை நெறித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை கொள்ளனூர் ஏரியில் வீசியுள்ளனர்.
சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமிக்கும், ப்ரவீனுக்கும் பழக்கம் இருப்பது தெரிந்து கொண்டனர்.
பிறகு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.