கேரளாவில் ஆணவக்கொலைக்கு காதல் கணவனை பறிகொடுத்த நீனுவின் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதா கூறி அவளைஇழிவுபடுத்த முயல்வதாக இறந்துபோன கெவினின் தந்தை ஜோசப் கூறியுள்ளார்.
நீனு என்கிற மாற்று சமூகத்தைச்சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கெவின் ஜோசப் என்ற இளைஞர் கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
கணவர் கொலை செய்யப்பட்ட பின், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நீனு வேதனையிலிருந்து மீண்டு கல்லூரி செல்லத் தொடங்கியுள்ளார்.
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த அவருக்கு, கெவின் ஜோசப்பின் பெற்றோர் ஆறுதல் அளித்து, படிப்பைத் தொடங்க உதவியுள்ளனர்.
கெவினை கொலை செய்த குற்றத்திற்காக நீனுவின் தந்தை மற்றும் அண்ணனை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தனது கணவருக்கு ஜாமீன் கோரி நீனுவின் தாய் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும், நீனுவுக்கு மனநலம் பாதித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தை நீனுவின் மாமனார் மறுத்துள்ளார். அவளை எங்கள் மகள் போல பார்த்து வருகிறோம், அவள் நன்றாக படிக்கிறாள். அவளுக்கு மனநலம் பாதித்துவிட்டது என்று அவரது தாயார் கூறுவது அவரை இழிவுபடுத்துவதாக உள்ளது என கூறியுள்ளார்.
கேரள அரசு கெவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. நீனுவின் படிப்புச் செலவையும் அரசே ஏற்றுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டுமென்பது நீனுவின் லட்சியம்.