காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம் பெண் எடுத்த துணிச்சலான முடிவு!!

304

சென்னை….

கரூரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

சென்னையை சார்ந்த இளம்பெண் சத்தியபிரியா (23). இவர் பி.காம் முடித்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்து சென்ற கரூர் காந்திகிராமத்தை சார்ந்த சதீஸ்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மாறி கடந்த 2021 ஏப்ரல் மாதம் 22ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு முன்பு சதீஸ் ஒரு பட்டதாரி என்றும், சட்ட ஆலோசகராக பணிபுரிவதாகவும் கூறி திருமணம் செய்துள்ளார். பின்னர் திருமணமாகி 7வது நாளிலேயே அவர் 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சத்திய பிரியா, சதீஸ்குமாரிடமும், அவரது தாய், தந்தையிடமும் கேட்டு சண்டையிட்டுள்ளார்.

காலம் போக, போக சதீஸ்குமார் கஞ்சா விற்பனை செய்வது, ரவுடிகளுக்கு பட்டாகத்தி, கள்ள துப்பாக்கி விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தது.

மேலும், இணையதள வங்கி பரிவர்த்தனை மூலம், சியாம், பிரசாத், சதீஸ், பவித்ரா பிரசாத், ஸ்ரீராம் என்ற பல பெயர்களிலும், பல ஊர்களிலும் போலியாக ஆதார் கார்ட், விசிடிங் கார்ட் தயாரித்து வெளி நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி அலுவலகம் வைத்து பணத்தை பலரிடம் மோசடி செய்துள்ளார் சதீஸ்குமார்.

அதுமட்டுமின்றி சத்தியபிரியாவிற்கு தெரியாமல் அவருடைய வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பண பரிவர்த்தனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சதீஸ்குமார் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சதீஸ்குமாரிடம் கேட்ட போது சண்டை அடிக்கடி வந்துள்ளது.

மேலும், சத்தியபிரியாவை வீட்டினுள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி கஞ்சாவை கட்டாயப் படுத்தி புகைக்க செய்ததாகவும், கர்ப்பமாக இருப்பதை அறிந்து அவருக்கு கருகலைப்பு செய்து வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், மயில் துத்தநாக பொடியை குளுகோஸில் கலந்து கொடுத்து வந்துள்ளனர். பின்பு அவர் உயிரிழந்து விட்டால் பிரச்சினையாகி விடும் எனக் கூறி அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

கடந்த 6 மாத காலமாக வீட்டினுள் அடைத்து வைத்து உணவு வழங்காமல், பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியதாக கூறி சத்தியபிரியா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

தனது நண்பரின் திருமணத்திற்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு சென்னை சென்ற சத்தியபிரியா ஆன்லைனில் 3 முறை புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.