திருப்பத்தூர்….
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை அடுத்த சான்றோர் குப்பம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் வினித். இவர் தனியார் காலனி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதே தொழிற்சாலையில் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்த நிவேதா என்ற இளம்பெண்ணும் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது வினித் மற்றும் நிவேதா ஆகியோருக்கு இடையே பழக்கம் உருவான நிலையில் நாளடைவில் அவர்களுக்கு இடையே காதலும் மலர்ந்துள்ளது.
வினித் – நிவேதா காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர் வினித் மற்றும் நிவேதா ஜோடி. அதன்படி வினித் மற்றும் நிவேதா ஆகியோர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணமும் செய்து கொண்டுள்ளனர். காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டதால் இரு வீட்டாரும் திருமணத்தை ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில், வினித் மற்றும் நிவேதா ஆகிய இருவரும் மறுவீடு அழைப்பிற்காக வாணியம்பாடியில் உள்ள காமராஜ்புரம் பகுதியில் இருக்கும் நிவேதாவின் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது தான் யாரும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறி உள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனியாக இருந்து நிவேதா, விபரீத முடிவு எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், இளம்பெண் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருமணமான 10 தினங்களிலேயே காதல் திருமணம் செய்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையிலும் காவல் துறையினர் இறங்கி உள்ளனர்.