காளான் பறிக்க சென்ற இரு பெண்கள் வெட்டிக்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1100

அரியலூர்…..

அரியலூர் மாவட்டம் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவர் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி மலர்விழி ( 29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த தண்டபாணியின் மனைவி கண்ணகி (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை கண்ணகியும், மலர்விழியும் சமையல் செய்வதற்காக அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிப்பதற்காக சென்றுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது மகள் வயல் பகுதிக்கு சென்று தேடியுள்ளார்.

தகவல் அறிந்த அந்த ஊரை சேர்ந்த இளைஞர்களும் வயலுக்கு சென்று தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு மலர்விழி, கண்ணகி ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து கலைமணி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மலர்விழி, கண்ணகி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்யப்பட்ட மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் நகைகளை காணவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் நகைகளுக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், 2 பெண்களும் நகைக்காக கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைக்காக 2 பெண்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.