காஞ்சிபுரம்…
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் ஓட்டுனரான செல்வம் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் உறவினருடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
பின்னர் உறவினரின் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவரது மனைவி உறவினரின் காரில் சென்று விட்டதால் செல்வமும் 2 மகன்களும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மதுரவாயல் அருகே வைத்து முன்னால் சென்று கொண்டிருந்த 3 சக்கர சைக்கிளின் மீது இவரது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேரும் சாலையில் நிலை தடுமாறி விழுந்து விட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி தந்தை மற்றும் மகன் 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் குழந்தைகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த செல்வத்தை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனர் ராமையாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.