குணா…
மதுரை அருகேயுள்ள அலங்காநல்லூரில், குப்பையில் கிடந்த காலாவதியான பொருட்களை சாப்பிட்ட 8ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் 1வது வார்டு பகுதியைச் சேர்ந்த சின்னாண்டி என்பவரது மகன் குணா (13). இவர், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவரும் இவரது நண்பரான சசிகுமார் (11) என்பவரும் பள்ளி விடுமுறை என்பதால் அந்த பகுதியில் சுற்றிதிரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளி அருகே குப்பையில் கிடந்த காலாவதியான உணவுப் பொருட்களை எடுத்து இருவரும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் இரு சிறுவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் இருவருக்கும் அலங்காநல்லூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்தனர்.
இதையடுத்து சிறுவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிறுவன் குணா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் இறப்பு குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.