ஒன்றரை லட்சம் ரூபாய்..
ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை குப்பை பையில் தவறுலாக போட்டு, அதனை குப்பை சேகரிக்கும் வண்டிக்கு அனுப்பிய ஒருவர், பிறகு அந்தப் பணத்தை பெரும் முயற்களின் பின்னர் பெற்றுக் கொண்ட சம்பவமொன்று இலங்கையின் கல்முனைப் பிரதேசத்தில் இன்று நடந்தது.
கல்முனை நகர மண்டப வீதியில் நேற்று செவ்வாய்கிழமை காலை வழமைபோன்று, வீடுவீடாக குப்பைகளைச் சேகரித்துக் கொண்டிருந்த கல்முனை மாநகர சபையின் திண்ம கழிவகற்றல் வாகனமொன்றில், தனது வீட்டுக் குப்பை பையினை பெண்ணொருவர் ஏற்றியுள்ளார்.
இதேவேளை, வெளியில் சென்றிருந்த அந்தப் பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்தபோது, சிறிய பை ஒன்றினுள் இட்டு, மேசை மீது அவர் வைத்திருந்த பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து கணவர் கேட்டபோது; “குப்பைகளுடன் தவறுதலாக பணமும் சென்றிருக்கலாம்” என மனைவி கூறியுள்ளார்.
உடனடியாக கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் பிரிவின் மேற்பார்வையாளர் எம்.எம்.எம். றிஸ்வான் என்பவரைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்ட பணத்தின் உரிமையாளர், விடயத்தைக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, மாநகர சபை ஊழியர்கள் துரிதமாகச் செயற்பட்டு, குறித்த வாகனத்திலிருந்த குப்பைகளிலிருந்து சம்பந்தப்பட்ட நபர் ஏற்றி அனுப்பிய குப்பை பையினை எடுத்துப் பார்த்தபோது, அதனுள் ஒன்றரை லட்சம் இலங்கை ரூபாய் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திண்மக்கழிவகற்றல் பிரிவின் மேற்பார்வையாளர் றிஸ்வான் கூறுகையில்;
“காலை 10.30 மணியளவில் குறித்த பெண்ணின் கணவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடன் பேசினார். அப்போது அவர் மிகவும் பதட்டமாக இருந்தார்.
தேவையொன்றுக்காக நகைகளை அடகுவைத்து, குறித்த பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், அந்தப் பணம் தொலைந்து விட்டதாகவும் சொன்னார்.
இதனையடுத்து, குறித்த வாகனத்தை சாய்ந்தமருது பிரதேசத்தில் நிறுத்தினோம். அப்போது பணத்தைத் தொலைத்த நபரும் அவரின் மனைவியும் அங்கு வந்திருந்தார்கள்.
அந்த வாகனத்தில் இருந்த குப்பைகளுக்கிடையே, சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிலிருந்து ஏற்றப்பட்ட குப்பை பையினை முக்கால் மணி நேரத்தின் பின்னர் கழிவகற்றும் ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
அதனுள் அவர்கள் கூறியது போல் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அந்தப் பணம் அவர்களுக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட உரிமையாளர்கள், அதனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்த ஊழியர்களுக்கு ஒரு தொகைப் பணத்தை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்கள்.
ஆனால் அதனை ஊழியர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கஷ்டத்தில் நகைகளை அடகு வைத்துப் பெற்றுக் கொண்ட பணம், அவர்களுக்கு கிடைத்ததில் எங்களும் மகிழ்ச்சிதான்,” என்றார் மேற்பார்வையாளர் றிஸ்வான்.