கைகளால் மண்ணை அள்ளி அவசரமாய் புதைத்தோம் : கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை வைத்து தவித்த நண்பர்!!

557

கொரோனாவால்..

தமிழகத்தின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் (வயது 55). இரு வாரங்களுக்கு முன்பு, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று (ஏப்.19), ஞாயிற்றுக்கிழமை, சிகிச்சை பலனின்றி மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்க அண்ணாநகர் எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் வேலங்காடு இடுகாட்டுக்குக் கொண்டு சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர், கொரோனா தொற்றுக்குப் பயந்து மருத்துவர் உடலை அங்கு புதைக்கக் கூடாது எனக்கூறி, அங்கிருந்தவர்களை கல், கட்டையால் அ டித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தாக்கியதில் அதன் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு பணியாளருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர்களிடம் தப்பித்து பிரேதத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றனர். பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த பொலிசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை இரவு 1 மணியளவில் வேலங்காடு கல்லறைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

அப்போதும் பொலிசாருடனும், அதிகாரிகளுடனும் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோரைத் பொலிசார் தேடி வருகின்றனர்.

மருத்துவர் சைமன் குறித்து பலரும் கூறுவது அவருடைய மனிதாபிமான பண்பைத்தான். ஆனால், அந்த மருத்துவருக்கே இறுதி மரியாதையைச் செலுத்த முடியாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர்கள் மீது வ ன்முறை நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவரின் உடல் அவரது மனைவி, மகன் கூட இல்லாமல் அவசர அவசரமாகப் புதைத்தது மருத்துவர் சைமனின் நண்பரும் மருத்துவருமான பிரதீப் தான். நேற்று என்ன நடந்தது என்ன என்பதை ‘இந்து தமிழ் திசை’யிடம் பகிர்ந்துகொண்டார் மருத்துவர் பிரதீப்.

மருத்துவர் சைமன் அன்பான இதயம் கொண்டவர். மிகவும் திறமையாக மருத்துவமனையை வழிநடத்தி வந்தார். மிகவும் நல்ல மனிதர்.

அவர் பரிசோதித்த நோயாளிகள் மூலம் அவருக்குக் கொரோனா வந்திருக்கக்கூடும். அவருக்கு கொரோனா இருப்பது தெரிந்த உடனேயே மருத்துவமனைக்கு சீல் வைத்துவிட்டோம்.

நேற்று அவர் இறந்த பிறகு ஆம்புலன்ஸில் அவரது உடலை ஏற்றிக்கொண்டு முதலில் டி.பி.சத்திரத்தில் உள்ள மாநகராட்சி கல்லறைக்குச் சென்றுகொண்டிருந்தோம்.

மருத்துவருக்கு நெருக்கமான நான் உட்பட 5 மருத்துவர்கள், அவரது மனைவி, மகன், சுகாதார ஆய்வாளர் என மொத்தம் 10 பேர் தான் இருந்திருப்போம்.

ஆனால், மருத்துவரின் உடலை அங்கு புதைக்கக்கூடாது என, டி.பி.சத்திரத்தில் மக்கள் போராட்டம் நடத்தியதால் வேறு இடத்தில் புதைக்கலாம் என, உடனிருந்த சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

அதன் பிறகு நாங்கள், காந்தி நகர் வேலங்காடு இடுகாட்டில் புதைப்பதற்குச் சென்றோம். அங்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்ட ஆரம்பித்தனர். சுகாதாரத்துறை விதிகளின்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை 12 அடி ஆழத்தில்தான் புதைக்க வேண்டும்.

குழி தோண்ட ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே அப்பகுதியைச் சேர்ந்த 60-70 பேர் கல், கட்டை உள்ளிட்டவற்றால் எங்கள் அனைவரையும் தாக்க ஆரம்பித்தனர். தகாத வார்த்தைகளில் பேசி அங்கிருந்து கிளம்புமாறு மிரட்டினர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அவரது உதவியாளர், சுகாதார ஆய்வாளர், மருத்துவரின் மனைவி, மகன் என அவர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை.

எல்லோரையும் பயங்கரமாகத் அ டிக்க ஆரம்பித்தனர். ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அ டித்ததில் அதன் கண்ணாடி உடைந்தது. அதில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்து அனைவரும் மருத்துவரின் உடலை அங்கேயே போட்டுவிட்டு ஓடினர். வேறு வழி தெரியவில்லை. எல்லோரும் பயந்துகொண்டு ஓடியபோது, நானும் அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளரின் உதவியுடன் மீண்டும் அவரது உடலை ஆம்புலன்ஸில் போட்டுக்கொண்டு கிளம்பினோம்.

உடன் ஒரு மருத்துவரும், 2 வார்ட் பாய் பணியாளர்களும் இருந்தனர். அங்கு செல்வதற்குள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் பொலிஸ் பாதுகாப்புடன் உடலைப் புதைக்க முடிவெடுத்தோம்.

ஜேசிபி இயந்திரத்தை இயக்குவதற்கு யாரும் இல்லாததால், 6 அடி தோண்டியிருந்த குழியை மண்வெட்டியால் மீண்டும் சிறிது அடி தோண்டி, கைகளாலேயே மண்ணை அள்ளிப்போட்டோம்.

நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து எல்லாம் முடிய 3.30 மணி ஆனது” என தன் நெருங்கிய நண்பரின் உடலைத் தானே புதைத்ததன் வேதனையை கண்ணீருடன் கூறினார்.
மனிதநேயமிக்கவர் என பெயர் பெற்ற மருத்துவர் சைமனின் உடல் அவரது மனைவி, மகன் இல்லாமலேயே புதைக்கப்பட்டது.

சுகாதாரத்துறை விதிகளை முறையாகப் பின்பற்றியே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு நிகழ்த்தப்படுவதாகக் கூறும் மருத்துவர் பிரதீப், அவ்வாறுதான் மருத்துவர் சைமனின் உடலும் புதைக்கப்பட்டதாக கூறுகிறார்.

கொரோனாவால் இறந்தவரின் உடலில் சோடியம் ஹைப்போகுளோரைடு தெளிக்கப்பட்டு கிருமி நீக்கப்பட்டு, பாதுகாப்பான மூன்றடுக்கு பிளாஸ்டிக் பையில் உடலைப் போட்டுத்தான் அடக்கம் செய்வார்கள்.

அதிலிருந்து நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு பூஜ்ஜியம்தான். இறந்தவரின் மூக்கு, வாயை மூடிவிடுவோம். அவரது முகத்தைப் பார்க்கக் கூட முடியாது.

உடலைக் கையாள்பவர்கள் முதல் இடுகாடு அல்லது சுடுகாட்டுக்குச் செல்பவர் வரை எல்லோரும் பாதுகாப்பான உடைகள் அணிந்திருப்பர். சுகாதார ஆய்வாளரும் அந்த இடத்தில் இருப்பார்.

உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் கிருமிநாசினி தெளிக்கப்படும். விதிகளை முறையாகப் பின்பற்றாமல் இருந்தால்தான் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றார், பிரதீப்.

சுகாதாரத்துறை விதிகளின்படி, இறந்தவரின் உடலில் புனித நீர் தெளிப்பது, சார்ந்துள்ள மத புனித நூல்களை வாசிப்பது போன்றவற்றை நிகழ்த்தலாம்.

கடைசியாக இறந்தவரின் முகம் மட்டும் திறந்து காண்பிக்கப்படும். ஆனால், இறந்தவரைத் தொடுவதற்கு அனுமதி இல்லை. இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் முறையான சுகாதார விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

கொரோனாவால் இறந்தவர்களுக்கு விதிமுறைகளை பின்பற்றி இறுதிச் சடங்கு செய்தால் அதன் மூலம் தொற்று பரவ வாய்ப்பில்லை என மருத்துவர் அமலோற்பவநாதன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், இறந்த ஒருவரால் தும்மவோ இருமவோ மூச்சு விடவோ முடியாது. எனவே ஒருவர் இறந்த அந்த தருணமே தொற்று பரவுவதற்கான அனைத்து வழிகளும் தடைபடுகிறது.

இறந்தவரின் தோலில் வைரஸ் தொற்று இருக்கக்கூடும், ஆனால், இறந்த ஒருவரைத் தொடாமல் இருக்கும் வரை தொற்று பரவுவதற்கான வாய்ப்பு பூஜ்ஜியம் தான்.

கொரோனாவால் இறந்தவரை புதைப்பதோ எரிப்பதோ முழுக்க பாதுகாப்பானது. 8 அடி குழியிலிருந்து எந்தவொரு வைரஸும் மேலேறி வராது. 4,000 சென்டிகிரேட் டிகிரி நெருப்பில் எந்தவொரு வைரஸும் வாழாது என தெரிவித்துள்ளார்.

தன் நெருங்கிய நண்பரின் உடலை தானே புதைத்த வேதனையிலிருந்து மீளாத மருத்துவர் பிரதீப் மருத்துவர்களை சக மனிதர்களாக மதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்.

எங்களுக்கும் பயம் இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. எங்களுடையதும் உயிர்தான், எங்களுக்கும் மரணம் வரும். மக்களுக்கு கொரோனா குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை.

மக்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. எங்களுக்கு எதிராகத் திரும்புவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் கதவை அடைத்துக்கொண்டது போன்று நாங்களும் அடைத்துக்கொண்டால் என்னவாகும்? மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எங்களுக்குக் கைதட்டலோ விளக்கொளியோ தேவையில்லை. நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மக்களுக்கு விளக்கினாலே போதும்.

மருத்துவரை ஹீரோவாக்க வேண்டாம். சாதாரண மனிதர்களாக விட்டு விடுங்கள். கொரோனா மட்டுமல்ல ஹெச்ஐவி, காசநோய் உள்ளிட்ட நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போதும் அவர்கள் மூலம் எங்களுக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், நாங்கள் அவர்களை ஒதுக்கவில்லையே?

பலரையும் காப்பாற்றிய மருத்துவரின் உடலுடன் சாலையில் நின்றது வேதனையாக இருந்தது. நிறைய மரணங்களைப் பார்த்திருக்கிறோம். மரணம் எங்களுக்குப் புதிதல்ல. ஆனால் யாரையும் புதைத்ததில்லை. முதல் முறையாகப் புதைத்திருக்கிறேன் எனக்கூறும் மருத்துவர் பிரதீப்பால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

மருத்துவர் பிரதீப் உடன் இருந்து உடலை அடக்கம் செய்வதில் உதவி செய்த மருத்துவர் பாக்யராஜ் என்பவரும் அந்தச் சம்பவத்திலிருந்து மீளவில்லை. இச்சம்பவம் தொடர்பாக அவர் பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களைக் கல்லையும் கட்டையையும் எடுத்துக்கொண்டு தாக்கினர்.

கிட்டத்தட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் இறந்த ஒரு மருத்துவருக்கு மக்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? மக்கள் கொடுக்கும் பரிசு இதுதானா?

மருத்துவப் பணிக்கு வந்ததற்காக வெட்கம் கொள்கிறேன். இந்த வார்த்தைகளுக்காக என்னை மன்னிக்க வேண்டும். மருத்துவர் சைமன் மனிதத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். மக்களின் மனதில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

– Thehindu