சென்னை…
சென்னை பெருநகர ஆயுதப்படை பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் 2-ஆம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் சாதிக் பாஷா தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர்களான நிரஞ்சன், நெப்போலியன் ஆகியோருடன் கீழ்ப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக சாதிக் பாஷாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சாதிக்பாஷா நிரஞ்சன் மற்றும் நெப்போலியனிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நிரஞ்சனும், நெப்போலியனும் வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது சாதிக்பாஷா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாதிக் பாஷாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாதிக்பாஷா எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என அவர் எழுதியுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.