சமூக வலைத்தளம் கொண்டாடும் சூப்பர் ஹீரோ : என்ன காரணம் தெரியுமா?

1000

சூப்பர் ஹீரோ

இந்தியாவின் மும்பையில் பரபரப்பான அந்தேரி மரோல் பகுதியிலுள்ள ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்தில் உயிரிழப்பை பெருமளவில் குறைத்தவர் சித்து ஹுமானபாத். அவர் ஸ்விக்கியில் டெலிவரி பையனாக வேலைபார்த்து வருகிறார். தீ விபத்து ஏற்பட்ட அன்று மருத்துவமனை ஓரமாக தனது இருசக்கர வாகனத்தில் சித்து சென்று கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனை கட்டடத்தில் தீ பரவுவதை பார்த்த சித்து உடனடியாக தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குள் ஓடியுள்ளார்.

ஏற்கெனவே தீயணைப்பு வீரர்கள் வந்திருந்த நிலையில் அவர்களுடன் சேர்ந்துக்கொண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளார். தனது துரித நடவடிக்கையால் 10 பேரின் உயிர்களை சித்து காப்பாற்றியுள்ளார். கடுமையான புகையில் மீட்புப்பணியில் ஈடுபட்டதால் மூச்சு பிரச்னையில் சிக்கி தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து பேசிய சித்து, நான் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டேன். என்னை ஏணியில் ஏறி மீட்புப்பணி செய்ய அவர்கள் அனுமதித்தார்கள். அதற்கு நன்றி. சிறிய கோடாரியால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டேன் என்று தெரிவித்தார்.

மருத்துவமனையில் சித்துவுடன் எடுத்த புகைப்படத்தை மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ய, அது தற்போது வைரலாகி வருகிறது. சித்துவை மஹாராஷ்டிராவின் சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தனக்கு ஏதும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையிலும் பலரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார் சித்து. அவரின் தைரியத்தையும் மனிதாபிமானத்தையும் தற்போது மும்பையே பாராட்டி வருகிறது. பலரும் இணையதளங்களில் இவரது புகைப்படத்தை பகிர்ந்து சூப்பர் ஹீரோ என்று பதிவிட்டு வருகின்றனர்.