சின்னம்மை! ஏற்படுவது ஏன்? சிகிச்சை முறைகள் என்ன?

2057

உடலில் உள்ள வெப்பம் வெயில் காலங்களில் அதிகரிப்பதாலேயே அம்மை நோய் வருவதாக பலரும் நினைத்து கொண்டிருக்கின்றனர்.உண்மையில் கோடை காலங்களில் அசுத்தமான சுற்று சூழலால் மற்றும் குப்பை கூளங்களால் பல்வேறு கிருமிகள் பலவிதமான முறையில் காற்றுடன் கலக்கின்றன.

இவற்றில் ஒன்றுதான் வேரிசெல்லா ஜாஸ்டர்’ (Varicella Zoster) எனும் கிருமி, சின்னம்மை எனப்படும் சிக்கன் பாக்ஸ் இந்த கிருமி மூலமாகத்தான் ஏற்படுகிறது.

சின்னம்மையின் பாதிப்பு பெரியவர்கள் வரைக்கும் பரவினாலும் குறிப்பாக 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகமாக பாதிக்கிறது.ஜனநடமாட்டம் அதிகமாக உள்ள இடங்கள், நெருக்கடியான வீடுகள், அசுத்தமான குடியிருப்புகள், விடுதிகள் இது போன்ற இடங்களில் இந்த கிருமியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இதனால் வெகு விரைவில் பாதிக்கப்படுவர்.

அம்மை நோயினால் உடலில் ஏற்படும் நீர் கொப்புளங்கள் உடைந்து இந்த கிருமிகள் பரவலாம். பாதிப்படைந்தோர் தும்முவதன் மூலமும் இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவி விடும்.

அது மட்டுமின்றி இவர்கள் பயன்படுத்தும் உடைகள், துணிகள், போர்வைகள், உண்ணும் உணவு பாத்திரங்கள் இதன் மூலமும் பரவ வாய்ப்பிருக்கிறது, இதனாலேயே அம்மை நோய் உள்ளவர்களை அக்காலத்தில் தனியறையில் வைத்தனர்.

ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் போல் இருக்கும் அடுத்த நாள் உடல் வலியும் சேர்ந்து வரும். அதன் பின் தலையில் அரிப்பு [போன்றவை ஏற்படும். வாயை சுற்றி உள்ள பகுதி மற்றும் நாக்கில் கொப்புளங்கள் தோன்றும் காய்ச்சல் கடுமையாகும்.

உடல் முழுதும் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படும். அடுத்தநாளே இவை நீர் கொப்புளங்களாக மாறிவிடும்.எப்போதும் இந்த அம்மை நோய் ஆரம்பித்து ஏழு நாட்களில் படிப்படியாக குறைய தொடங்கும். ஏழு நாட்களில் காய்ச்சல் குறையும், கொப்புளங்கள் வறண்டு சுருங்கி உதிர ஆரம்பிக்கும்.

சில மாதங்கள் நேரம் எடுத்து அம்மை தழும்புகள் குணமாக ஆரம்பிக்கும். ஒருமுறை சின்னம்மை வந்தவருக்கு ஆயுள் முழுமைக்கும் மீண்டும் இது திரும்ப வராது காரணம் அவரது உடல் இந்த கிருமியை எதிர்க்கும் எதிர்ப்பு அணுக்களை உருவாக்கி விடுவதால் மீண்டும் இந்த நோய் வர வாய்ப்பில்லை.

பொதுவாக பழங்கால முறைப்படி அம்மை நோய்க்கு சிகிச்சை எடுக்க அநேகம் பேர் தயங்குவார்கள். அம்மனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால்.

பெரும்பாலும் வேப்பிலையும் மஞ்சளும் இதற்கு அரு மருந்து, இருப்பினும் தற்போது அலோபதி முறையில் மருந்துகள் வந்துவிட்டன. இதன் மூலம் ஐந்து நாட்களில் அம்மை நோய் குணமாகிறது.

அது மட்டுமின்றி இதற்கான அலோபதி களிம்புகள் பூசுவதன் மூலம் கொப்புளங்கள் வலியின்றி வெகு விரைவில் காய்ந்து விடுகின்றன. சித்த வைத்தியத்தில் ஓம வள்ளி இலைகளை எடுத்து அரைத்து பற்று போடு வந்தாலும் அம்மை தழும்புகள் மாயமாகிவிடும்.

அம்மை நோய் என்பது உடல் வெப்பத்துடன் தொடர்புடையது என்று பொதுவான நம்பிக்கை நிலவுவதால் அந்த சமயங்களில் அசைவ உணவுகளை தவிர்க்க சொல்வார்கள். அது அவசியம் இல்லை எந்த வகையான உணவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

அம்மை நோய் சமயங்களில் உடலில் நீர் சத்து குறைந்து காணப்படுவதால் பால், மோர், இளநீர், கரும்பு சாறு போன்ற நீராகாரங்கள் சேர்த்து கொள்வது அவசியம்.

அதோடு நோய்ப்பட்ட நேரங்களில் ஜீரண உறுப்புகள் சரிவர இயங்காது, ஆகவே அந்த சமயங்களில் கஞ்சி கூழ் போன்ற எளிதில் ஜீரணமாகும், உணவை உட்கொள்ளுதல் நல்லது. பப்பாளி, தக்காளி, கேரட், கீரை வகைகளை உட்கொள்ளலாம்.

வழக்கமாக அம்மை நோய் தாக்கினால் சரியாகும் வரை குளிக்க கூடாது என்றொரு விதி உண்டு, எனினும் காலை மாலை இரு வேலைகளிலும் வெது வெதுப்பான நீரில் சுத்தமான பருத்தி துணியை நனைத்து உடலில் ஒற்றி எடுத்து சுத்தம் செய்யலாம்.

வெதுவெதுப்பான நீரில் வாய் கழுவிக் கொள்ளலாம். முகத்தையும் கண்களையும் அடிக்கடி சுத்தமான நீரில் கழுவி கொள்ளலாம்.இவ்வாறு செய்வதால் கிருமிகள் ஒன்றோடு ஒன்று பரவுவது தடுக்கப்பட்டு விரைவில் அம்மை நோய் குணமாகி விடும்.

இப்போது சின்னமாய் தடுப்புக்கு சில தடுப்பூசிகள் வந்துவிட்டன. பிறந்து 15 மாதங்கள் முதல் பெரியவர் வரை இந்த தடுப்பூசியை குறிப்பிட்ட தவணை முறையில் போட்டுக் கொள்ள முடியும். இருப்பினும் சின்னம்மை வந்தவுடன் தடுப்பூசி போட்டால் பலன் கிடைக்காது.

சுய சுத்தம் மற்றும் சுற்று சூழல் சுத்தம் காப்பது அவசியம். அம்மை நோய் வந்தவர்களுடன் அதிகம் நெருங்கி பழகாமல் இருப்பதன் மூலம் அம்மையை தவிர்க்கலாம். அம்மை நோயாளிகள் பயன்படுத்திய பொருள்களை நாமும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

வீட்டிலோ அலுவலகத்திலோ யாருக்கேனும் அம்மை நோய் வந்து விட்டது என்றால் உடனடியாக மூன்று நாட்களுக்குள் நாமும் தடுப்பூசி போடு கொள்வதன் மூலம் கிருமி பரவாமல் காப்பாற்றி கொள்ளலாம்.