சீனாவில் இருந்து வந்த கொள்கலன் பெட்டிக்குள் அரிய வகை விலங்கு!!

612

அரிய வகை விலங்கு…..

சீனாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டி ஒன்றில் இருந்த உடும்பை போன்ற விலங்கொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

ஏக்கல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு மூலப் பொருட்களை எடுத்து வந்த கொள்கலன் பெட்டியில் இந்த விலங்கு இருந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்த பின்னர், முத்துராஜவெல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் அதனை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

ஏக்கல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் வழங்கிய தகவலுக்கு அமைய அங்கு சென்று உடும்பை போன்று காணப்பட்ட அந்த விலங்கை தாம் பொறுப்பேற்றுக்கொண்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் மேல் மாகாண உதவிப் பணிப்பாளர் சட்டத்தரணி லலித் விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டியில் இருந்த விலங்கு இலங்கையில் அரிதாக காணப்படும் Varanus bengalensis என்ற விலங்கியல் பெயரில் அழைக்கப்படும் உடும்பு விலங்கு குடும்பத்தை சேர்ந்த குட்டி என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த உடும்பு குட்டி கொள்கலன் பெட்டிக்குள் சென்றதா அல்லது சீனாவில் இருந்து வந்ததா என்பதை இதுவரை உறுதியாக கூற முடியாதுள்ளது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.