சுஜித்…..
பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உ யிரிழந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் வில்சனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி வரும் 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் விழுந்து, இப்போது ஓராண்டாகிறது.
சிறுவன் சுஜித் கிணற்றில் சிக்கிக் கொண்ட விபத்தையும், அவரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததையும் ஆறாத வடுவாக சுமந்து வருகின்றனர் நடுக்காட்டுப்பட்டி கிராம மக்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலைராணி. இவர்களுக்கு புனித் மற்றும் சுஜித் வில்சன் என இரண்டு மகன்கள் இருந்தனர்.
கட்டடத் தொழிலாளியான பிரிட்டோவின் வீட்டிற்கு அருகே அவருக்கு சொந்தமான விவசாய நிலமும் உள்ளது. அதில் பிரிட்டோவின் முந்தைய தலைமுறையினர் பல வருடங்களுக்கு முன்னர் ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளனர்.
தண்ணீர் வராததால், அதனை பயன்படுத்தாமல் மேலோட்டமாக மண் வைத்து மூடியிள்ளனர். அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி சோளப்பயிர் விவசாயம் செய்து வந்தார் பிரிட்டோ.
ஆழ்துளைக் கிணறு கைவிடப்பட்டிருந்த நிலையில், சமமான நிலப்பரப்பைப் போல் அந்த பகுதி இருந்துள்ளது. சில நாட்களாக பெய்த மழையால் குழயில் மேல் பரப்பிலிருந்த மண் உள்வாங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணியளவில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிரிட்டோவின் இளையமகன் சுஜித் எதிர்பாராத விதமாக அந்தக் குழிக்குள் விழுந்து சிக்கிக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவரை மீட்பதற்கான பணிகள் மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட தமிழக அமைச்சர்கள் அனைவரும் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டு மீட்பு பணிகளை கண்காணித்து வந்தனர்.
சுமார் 82 மணிநேர மீட்புப்பணிகளுக்கு பின், ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சுஜித் உயிரிழந்ததாகவும், அவரின் உடல் 29ம் தேதி அதிகாலை ஆழ்துளை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சுஜித்தின் உடல், நேரடியாக மருத்துவமனையில் இருந்து நடுக்காட்டுப்பட்டி அருகில் உள்ள பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது
இந்த விபத்து நடந்து ஓர் ஆண்டு ஆகியும் அந்த காட்சிகள் நினைவில் இருப்பதாகவும், தீபாவளி கொண்டாட்டங்களையும் மறந்து மீட்பு பணிகளை மட்டுமே பார்வையிட்டு வந்ததாக தெரிவிக்கின்றனர் நடுக்காட்டுப்பட்டி ஊர்மக்கள்.
ஓராண்டுக்கு பிறகு நடுக்காடுப்பட்டிக்கு சென்ற பிபிசி தமிழ் குழு, அந்த ஊரைச் சேர்ந்த ராஜலெட்சுமி என்பவரிடம் பேசியது. ”தீபாவளி பண்டிகைக்காக ஊர் மக்கள் அனைவரும் தயாராகி வந்தோம். எங்கெங்கோ வேலைக்கு சென்ற மக்களும், சொந்தங்களும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
பண்டிகை கால வியாபாரங்களும், பட்டாசு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. சரியாக தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மாலை 7 மணி அளவில், இரண்டு வயது சிறுவன் சுஜித் குழிக்குள் சிக்கிக் கொண்டதாக எனக்கு தெரியவந்தது.
நான் அந்த பகுதிக்கு சென்று பார்க்கையில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஊர் மக்களின் கூட்டத்தை அரசு அதிகாரிகள் கலைத்துக் கொண்டிருந்தனர்.”
”இருபது அடி ஆழத்தில்தான்தான் சிறுவன் சிக்கியுள்ளான், நிச்சயம் மீட்டு விடலாம் என ஊர் மக்கள் பேசிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் நாற்பது அடிக்கும் கீழ் சென்றதாக கூறப்பட்டது.
சுஜித்தின் தாய் அந்த குழியின் அருகே நின்று கொண்டு கதறி அழுத காட்சியை என்னால் மறக்கவே முடியாது. அது பிள்ளையை சுமந்து பெற்றெடுத்த ஒரு தாயின் வேதனை.” ”மூன்று நாட்களாக பெரிய இயந்திரங்களை வைத்து துளையிட்டு சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
தொலைகாட்சி செய்திகளை பார்த்துக் கொண்டு ஊர் மக்கள் அனைவரும் காத்திருந்தோம். 24 மணி நேரத்தை கடந்ததுமே உயிர் இருக்க வாய்ப்பில்லை என தோன்றியது. இருந்தும், ஒருவேளை சுஜித் காப்பாற்றப்படுவான் என நம்பியிருந்தேன். ஆனால், சிறுவன் சடலமாக தான் எடுக்கப்பட்டான்.
இந்த சின்ன வயதில் கடவுள் சுஜித்தை எடுத்துக் கொண்டானே என ஊர்மக்கள் அனைவரும் அழுது தீர்த்தோம். தீபாவளி பண்டிகையையே மறந்துவிட்டோம். ஊரில் உள்ள சிறுவர்கள் கூட சென்ற ஆண்டு பட்டாசு வெடிக்கவில்லை. மறக்க முடியாத சோகத்தை தந்து சென்றுள்ளான் சுஜித்,” என கண்கலங்குகிறார் ராஜலெட்சுமி.
சுஜித்தின் வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார் கோபால், சிறுவன் கிணற்றில் விழுத்த சில நிமிடங்களில் நேரில் சென்று பார்த்தவர் இவர்.
”சுஜித் கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டான் என தகவல் வந்ததும் உடனடியாக ஓடிச் சென்று பார்த்தேன். ஊர் மக்கள் இருபது பேர் அந்த குழியை சுற்றி நின்று கொண்டிருந்தனர். சுஜித்தின் தாய் அழுது கதறிக்கொண்டிருந்தாள்.
கூட்டத்தை விளக்கி குழிக்குள் பார்த்தேன். ‘அம்மா… அம்மா…’ என சுஜித்தும் அழுது கொண்டிருந்தான். அவன் அழுகும் சத்தம் மேலே இருந்த எங்களுக்கு கேட்டது. எதாவது செய்து காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்தோம்.
சில நிமிடங்களில் அதிகாரிகளும், தீயணைப்பு துறையினரும் அங்கு வந்து மீட்கும் பணிகளுக்கு தயாராகினர். அப்போது சிறுவன் 10 முதல் 20 அடி ஆழத்தில்தான் இருந்தான். எதாவது ஆயுதத்தை பயன்படுத்தி அவனை மேலே எடுத்துவிடுவோம் என நாங்கள் கேட்டுகொண்டோம். ஆனால், அதிகாரிகள் எங்களை தடுத்துவிட்டனர்.”
சற்று நேரத்தில் சிறுவனின் அழுகை சத்தம் கேட்கவில்லை. அவன் ஆழத்தில் சென்று கொண்டிருந்தான். வெளியூரிலிருந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளும் நபர்கள் வருவதாக தெரிவித்தனர். சில மணி நேரங்களில் மக்கள் கூட்டமும் அதிகரித்தது. அதிகாரிகளும், அமைச்சர்களும் வந்தனர்.
குழியை சுற்றி தடுப்புகளை உருவாக்கி, ஊர்மக்களை வெளியேற்றினர். அதற்கு பிறகு எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மிகப்பெரிய இயந்திர வாகனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள், பிரம்மாண்ட விளக்குகள், ஊடகத்தினர் என நடுக்காட்டுப்பட்டி அதுவரை பார்த்திடாத பெருங்கூட்டம் அன்றைக்கு சேர்ந்தது.
ஆனால், யாராலும் சுஜித்தை காப்பாற்ற முடியவில்லை. சிறுவன் காப்பாற்றப்பட்டிருந்தால் மிகப் பெரிய சாதனையாக அது அமைந்திருக்கும். இதைவிட, குழியில் உயிரோடு பார்த்த சிறுவனை காப்பாற்றாமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் தான் வேதனையளிக்கிறது,” என கூறுகிறார் கோபால்.
பிரிட்டோவின் வீட்டை கடந்து செல்கையில் சுஜித்தின் நினைவுகள்தான் முதலில் தோன்றும் என அவரை இழந்துவாடும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
”நான் சுஜித்தின் பாட்டி. அவனைப் பார்க்க அடிக்கடி வீட்டிற்கு வருவேன். ‘எனக்காக என்ன வாங்கி வந்த’ என கேட்பான். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விளையாடுவோம், பேசுவோம், வேடிக்கைப்பார்ப்போம்.
தோட்ட வேலை அவசரத்தில் அவனது வீட்டுக்குள் போகாமல் சாலையை கடந்தாலும் என்னைப் பார்த்து ஓடி வந்துவிடுவான். அமைதியான பையன், நல்ல விவரமானவன் சொல்வதை கவனமாக கேட்டு புரிந்து கொள்பவன்.
அவன் குழியில் விழுந்தபோது நான் வெளியூர் சென்றிருந்தேன். தகவலறிந்து வந்தும் அவன் முகத்தை கூட பார்க்க முடியவில்லை. அவன் வீட்டை கடக்கும்போதெல்லாம் அந்த திண்ணையை பார்த்துக்கொள்வேன்,” என வருத்தத்துடன் பேசினார் சுஜித்தின் உறவினர் ராணி
வீடு முழுவதும் எங்கு திரும்பினாலும் சுஜித்தின் நினைவாக படங்கள் நிறைந்திருக்கின்றன. சுஜித்தின் தந்தை, தாய் மற்றும் மூத்த மகன் இங்கு வசித்து வருகின்றனர். சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணறும், மீட்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட பிரம்மாண்ட பள்ளங்களும் சிமென்ட் கலவை மற்றும் மண்ணால் மூடப்பட்டுள்ளன.
மகனை இழந்த சோகம் தீராத சுஜித்தின் பெற்றோர் ஓராண்டு ஆகியும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பெரும் சோகத்தை அடக்கிக்கொண்டு பிபிசியிடம் பேசினார் சுஜித்தின் தந்தை பிரிட்டோ.
”இதுவரை வாழ்க்கையில் பல வேதனைகளையும் துன்பங்களையும் கடந்திருப்பேன். இந்த ஓர் ஆண்டாக நானும், எனது மனைவியும் அனுபவிக்கும் வலி விவரிக்க முடியாதது. சுஜித் நினைப்பில்லாத நாளே எங்களுக்கு இருந்ததில்லை.
பிள்ளையை பறிகொடுத்த வேதனையிலிருந்தே நாங்கள் இன்னும் மீளவில்லை. ஆனால், எங்கள் மீது சமூகவலைதளங்களில் மிகமோசமான விமரசனங்களை முன்வைக்கின்றனர். சில செய்திகளை பார்க்கும்போது தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தோன்றுவதாக எனது மனைவி என்னிடம் அழுது புலம்பியுள்ளார்.”
”ஏன் எங்களைப் பற்றி தவறான செய்திகளை பரப்புகின்றனர் என தெரியவில்லை. எது எப்படியோ, என்ன பேசினாலும், எதை செய்தாலும் எனது மகன் திரும்பிவரப்போவதில்லை.
எனது கோரிக்கை ஒன்றுதான், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தைகளில் எனது மகனே கடைசி ஆளாக இருக்கடும். இனிமேல் இதுபோன்ற விபத்து எங்கும் நடக்க கூடாது. அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கேட்டுக்கொண்டார் பிரிட்டோ.
2019ம் ஆண்டு ஆழ்துளை கிணற்றில் சுஜித் சிக்கி உயிரிழந்த விபத்திற்கு பிறகு பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு தமிழகத்தில் ஆழ்துளைக்கிணறு மரணங்கள் எதுவும் நிகழாதபோதும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆழ்துளைக்கிணறு விபத்துகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன.