செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால், வேறு பெண்களுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளாரோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கணவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த முயற்சித்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த சர்ஜின் – பிபிதா ஆகிய இருவரும் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் சமீபகாலமாக சர்ஜின், அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்ததாக தெரிகிறது. இதனால் வேறு பெண்ணுடன் கணவர் சர்ஜினுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் பிபிதாவுக்கு எழுந்தது. இதை அவர் சர்ஜினிடம் கேட்டதால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் இரவு சர்ஜின், பிபிதா மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது, நள்ளிரவில் சர்ஜினின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அங்கு வீட்டிற்குள் சர்ஜின் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடியும், அவரது அருகில் ஒரு இரும்பு கம்பியுடன் பிபிதா நிற்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்பகுதி மக்கள் சர்ஜினை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கிடையே கொலை முயற்சி சம்பவம் குறித்து அப்பகுதியினர் பொலிசிற்கு தகவல் தெரிவித்தனர்,
பொலிசாரிடம் பிபிதா கூறுகையில், காதல் கணவர் சர்ஜினுக்கு அடிக்கடி செல்போன் அழைப்புகள் வந்தன. அவரும் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார்.
இதனால் அவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அதுபற்றி அவரிடம் கேட்ட போது மழுப்பலாகவே பதிலளித்தார். மேலும் என்னிடம் ஒழுங்காக பேசாமல் அலட்சியப்படுத்தினார். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மேலும் இதுதொடர்பாக அடிக்கடி எங்களுக்கும் தகராறு ஏற்பட்டதால், கணவர் சர்ஜினை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அதன்படி, இரும்புகம்பியால் அவரை அடித்தேன், அப்போது சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்துவிட்டார்கள் என கூறியுள்ளார். தற்போது இவரை கைது செய்துள்ள பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.