திருச்சி….
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது,
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த திவ்யாஎன்ற பெண் கடந்த சில ஆண்டுகளாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நடைபயணம் செல்வது வழக்கம்.
அதுபோல கடந்த வெள்ளிக்கிழமை அன்று திவ்யா தனது தாய் வீட்டில் தங்கியிருந்தவாறு பக்கதர்களுடன் சேர்ந்து திட்டக்குடியில் தொடங்கி சமயபுரம் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
அவர் தனது இரண்டு வயது கை குழந்தையுடன் சென்று கொண்டிருந்த திவ்யாவுக்கு அசதியாக இருந்ததால் ஜெனரேட்டர் ஏற்றிக்கொண்டு ஒலிபெருக்கி கட்டியிருந்த ஆட்டோவில் பயணித்துள்ளார்.
அப்போது திவ்யா கண் அசந்த நேரத்தில் ஜெனரேட்டரின் ஃபேனுக்குள் அவரது தலை முடி சிக்கியுள்ளது. இதனால் அலறி கூச்சலிட்ட திவ்யாவின் குரல் ஒலிபெருக்கியின் சத்தத்தில் ஓட்டுநருக்கு கேட்கவில்லை. தொடர்ந்து அவரது தலை ஃபேனின் பிளேடில் சிக்கி கடுமையாக அடிபட்டுள்ளது.
அப்போது ஒலிபெருக்கி நின்ற நேரம் திவ்யாவின் கையில் இருந்த குழந்தை அலறவே பின்னால் திரும்பி பார்த்த ஓட்டுநர் உடனே ஆட்டோவை நிறுத்தி அங்குள்ளவர்களின் உதவியுடன் திவ்யாவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், திவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதில், குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் உயிர் தப்பியது. உயிரிழந்த திவ்யாவுக்கு திருமணமாகி வீரன் (28) என்ற கணவன், இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.