ஜோஸ் ஆலுக்காஸ் “சிங்க முக மாஸ்க்” கொள்ளையன் கைது : வெளியான பரபர தகவல்!!

384

வேலூர்…

வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகை கடை ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கடை ஊழியர்கள் மறுநாள் காலை கடையைத் திறந்து பார்த்தபோது, நகைகள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கடையில் மொத்தமாக 12 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அவற்றை கொளையர்கள் ஸ்ப்ரே அடித்து மறைத்துவிட்டு கொள்ளையடித்ததாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

நகைக் கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில் கடையின் சிசிடிவி கேமிராவில், சிங்கம் போன்ற மாஸ்க் அணிந்த ஒருவரது உருவம் பதிவாகியிருந்தது. அதனை இரு நாட்களுக்கு முன் காவல் துறையினர் வெளியிட்டனர். அதைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல் துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தான் அந்த முகமூடி போட்டிருந்தவரா? சிசிடிவிகளுக்கு ஸ்ப்ரே அடித்தவரா என்று தெரியவில்லை.