டிக்டாக் சூர்யா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது : ஒரு வருடத்துக்கு ஜெயில் வாழ்க்கை!!

363

கோவை…..

டிக் டாக் சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். டிக் டாக் மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா (33). இவர் மதுரை திருநகரில் வசித்து வந்தார்.

சுப்புலட்சுமி என்ற தனது பெயரை ரவுடி பேபி சூர்யா என்று மாற்றிக்கொண்டு சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கி ஆபாசமாக பேசுவது எப்படி?என்ற புக் போடும் அளவிற்கு வீடியோ வெளியிட்டு இணைய வாசிகளை முகம் சுளிக்க செய்து வந்தார்.

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பெண் யூடியூபில் தனது கணவருடன் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.

அப்போது சூர்யாவும் இவரது நண்பருமான சிக்கந்தர்ஷா என்ற சிக்கா என்பவரும் சேர்ந்து அந்த பெண்ணை ஆபாசமாக மிரட்டியதுடன் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை தனது எண் என தனது யூடியூப் வலைதளத்தில் சூர்யா பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பலரும் தம்பதிகளை அழைத்து, சூர்யா என நினைத்து மோசமான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதிகள் இது தொடர்பாக கோவை மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மதுரையில் தங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா, அவரது காதலர் சிக்கா ஆகிய இருவரையும் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, கோவை அழைத்து வந்தனர்.

தொடர்ந்து ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா மீது (294b, 354D, 354A 109, 509, 66D, 67 ITact 2000) பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தொழில்நுட்ப சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரும் எந்த நேரத்திலும் குண்டர் சட்டத்தில் கைதாகலாம் என்ற நிலையிலேயே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் சுப்புலட்சுமி என்ற சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது. மேலும், அவர்களது யூடியூப் சேனலை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.