தமிழகத்தில்….
தமிழகத்தில் டிக்டாக், பப்ஜி தடை செய்யப்பட்ட பின்னரும் அதன் தாக்கம் இன்னமும் இருந்து வருகிறது. டிக்டாக் செயல்பாட்டில் இருந்தபோதே ரயில் முன் நின்றும், ஆற்று பாறையில் ஏறி நின்றும் வீடியோ எடுக்கும்போது எதிர்பாராத பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும், பாதை மாறிய குடும்ப பெண்கள், படிப்பை மறந்த டீனேஜுகள், பிளே பாயான குடும்ப தலைவன் என இப்படியான செய்திகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
கடைசியில் அந்த ஆப்புக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஆம்பூர் அருகே செல்போனில் பழைய டிக்டாக் வீடியோ பார்த்துக் கொண்டிருப்பதை கண்டித்ததால் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முனியப்பன் என்பவரின் மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாணவி வீட்டில் செல்போனில் டிக்டாக் பார்த்துக்கொண்டிருப்பதை அவரது அண்ணன் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குபதிவு செய்து இறந்த மாணவியின் உடலை பிரேதபரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.