டிக்-டாக் நேரலையில் பயங்கரம்…. முன்னாள் மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த கொடூரன் : பகீர் சம்பவம்!!

1139

சீனா….

பெய்ஜிங்: சீனாவில் டிக்-டாக்கில் நேரலையில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த முன்னாள் மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கொடூர கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடப்பது இயல்பானது. ஒருவேளை இந்த சண்டைகள் அதிகரித்து ஒன்றாகவே வாழ முடியாத நிலைக்கு சென்றாலும் பரஸ்பரம் மன ஒப்புதலுடன் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழும் நிகழ்வுகளையும் சமூகத்தில் நாம் பார்க்கிறோம்.

ஆனால், சில நேரங்களில் மனைவி மீது எழும் சந்தேகங்கள் காரணமாக அடித்து துன்புறுத்துவது, கொடுமைக்கு உள்ளாக்குவது போன்ற மோசமான செயல்களில் கணவன்மார்கள் ஈடுபடுவதும் சமூகத்தின் அவலமாக இன்னமும் நீடித்து கொண்டுதான் உள்ளது.

சில தருணங்களில், விவாகரத்து பெற்ற பின்னரும் தனது முன்னாள் மனைவியை பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதும், அவர்களை மன ரீதியாக, உடல் ரீதியாக தாக்கும் மோசமான நிகழ்வுகளும் சமூகத்தில் இருப்பது வேதனையிலும் வேதனைதான். இதுபோன்ற ஒரு சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு தான் சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது முன்னாள் மனைவி மீது பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்த கொடூர நபருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்து நிறைவேற்றியுள்ளது. சீனாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:-

சீனாவின் டிக்-டாக் போன்ற சமூக வலைத்தளம் டுயின். குறுகிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் சமூக வலைத்தளமான இதில், சீச்சுவான் மாகாணத்தை சேர்ந்த லமு என்ற பெண் மிகவும் ஆக்டிவாக இருந்துள்ளார். விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்த லமு, தனது கணவர் தங் லு என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளார்.

ஆனாலும் தொடர்ந்து தன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு லமுவை தங் லு தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், திருமண உறவின் போது தன்னை கொடூரமாக தாக்கி துன்புறுத்தி வந்ததால், லமு திட்டவட்டமாக மீண்டும் திருமணம் செய்ய முடியாது எனக்கூறிவிட்டார்.

இதனால், கோபம் அடைந்த தங், அவரை அவ்வப்போது தொந்தரவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்திருக்கிறார். அந்த வகையில், சம்பவத்தன்று லமு, டுயின் சமூக வலைத்தளத்தில் நேரலையாக வீடியோ பதிவை போட்டு இருக்கிறார். அப்போது, லமுவுக்கு பின்னால் வந்த முன்னாள் கணவர் லு தங், லமு மீது பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார்.

இதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த லமு அலறி துடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் நேரலையாக வெளியான இந்தக் காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது. கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த லமு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட தங் லுவிற்கு நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து தங் லு மேல் முறையீடு செய்தார். ஆனால், அவரது முறையீட்டை நிராகரித்து நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் மரண தண்டனையை உறுதி செய்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று சீனாவின் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தங் லுவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பாக குடும்பத்தினரை சந்திக்க தங் லு விரும்பினார். அவரது இறுதி ஆசையை ஏற்று அதிகாரிகள் அதற்கு அனுமதி கொடுத்தனர். இதையடுத்து, அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.