ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனது மகனுக்கு டொனால்டு டிரம்ப் என பெயர் வைத்ததால் சிக்கலில் தவித்து வருகிறார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் சையத் அசாதுல்லா போயா (28). ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், தனது மகனுக்கு ‘டொனால்டு டிரம்ப்’ என பெயர் வைத்துள்ளார்.
டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, ‘டிரம்ப் எப்படி பணக்காரரானார்’ ஆனார் என்ற மொழிபெயர்ப்பு புத்தகத்தை, சையத் படித்து முடித்தார்.
அன்றிலிருந்து தனக்கு மகன் பிறந்தால் ‘டிரம்ப்’ என பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் சையத். அதனைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு சையதின் மனைவி ஜமிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
உடனே மகிழ்ச்சியில் திளைத்த சையத், தன் மனைவிடம் ‘டிரம்ப்’ பெயரை தங்களது மகனுக்கு வைக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால், ஜமிலாவுக்கு இதில் விருப்பமில்லை. மேலும், சையத்தின் பெற்றோரும் இதனை விரும்பவில்லை.
எனினும், தனது முடிவில் உறுதியாக இருந்த சையத், ‘டொனால்டு டிரம்ப்’ என்றே தனது மகனுக்கு பெயர் சூட்டினார். அதன் பின்னர், அந்த பெயரால் அவர் சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, தனது வேலையை உதறித் தள்ளிய சையத், காபூலில் குடியேறினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நான் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, உத்வேகம் பெற்றுதான் என் மகனுக்குப் பெயரைச் சூட்டினேன். டிரம்ப்பை மிகவும் நேசிக்கிறேன்.
பொருளாதாரத்தில் அவர் மிகச் சிறந்தவர். அரசியலிலும் உலகைக் கலக்கி வருகிறார். அதனால் தான் நான் அவரை மிகச் சிறந்த மனிதராகக் கருதுகிறேன்.
நான் ஒவ்வொரு முறை ‘டிரம்ப்’ என்று அழைக்கும் போதும், என் தந்தை கோபமடைகிறார். அவரால் இந்தப் பெயரை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சென்ற வாரம் ஒரு கூட்டம் வந்து இந்த பெயருக்காகவே எங்களை மிரட்டிச் சென்றது.
என் மனைவி பேஸ்புக்கில் குழந்தையின் பெயரை பயன்படுத்தும் போது, மிக மோசமான பின்னூட்டங்கள் இடப்படுகின்றன. சிலர் மிரட்டவும் செய்கிறார்கள். குடும்பத்தினர் எப்போதும் அச்சத்தில் இருக்கிறார்கள். என்ன ஆனாலும் சரி, குழந்தையின் பெயரை மாற்றுவதாக இல்லை.
நான் பெற்ற குழந்தைக்கு எனக்குப் பிடித்த பெயரைக் கூட வைக்க முடியவில்லை என்றால் அநியாயம் இல்லையா? என் குழந்தை வளர்ந்து, தன் பெயரை மாற்ற விரும்பினால் மாற்றிக் கொள்ளட்டும். அதுவரை டொனால்டு டிரம்ப் என்ற பெயரே இருக்கட்டும்’ என தெரிவித்துள்ளார்.