டூவீலர் வாங்கவே திணறிய இளைஞர் : இப்போது ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் காரின் உரிமையாளர்!!

354

இளைஞர்..

   

டூ வீலர்களைகூட வாங்க முடியாத ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞர் தற்போது நாட்டின் விலையுயர்ந்த கார்களில் ஒன்றான ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் காரை வாங்கியிருக்கின்றார். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

நம்மில் பலர் சிறு வயதில் விளையாட்டு கார் மற்றும் பைக்குகளை (ஸ்கேல் மாடல்கள்) ஓட்டி மகிழ்ந்திருப்போம். அப்போது, நம்மையே அறியாமல் பிடித்த ஏதேனும் ஓர் ஸ்கேல் மாடல் காரை காட்டி “இந்த காரைதான் நான் பெரியவனானதும் வாங்குவேன்” என்று குறும்புதனமாக நமது நண்பர்களிடம் கூறியிருப்போம்.

விளையாட்டாக கூறிய இதனை ஒரு சிலர் மட்டுமே தங்களின் வாழ்நாள் லட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். இதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அயராது உழைக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

அந்தவகையில், சிறு வயதில் இருந்து சூப்பர் கார்கள் மீது அளவுகடந்த ஆசை வைத்திருந்த ஓர் சாதாரண இளைஞன் தற்போது ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் சொகுசு காரை வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் தபேஷ் குமார். இந்த இளைஞர்தான் தற்போது ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் என்ற விலையுயர்ந்த ஆடம்பர காரை வாங்கியிருக்கின்றார். தற்போது விமானியாகி பணியாற்றி வரும் இவர், இரு சக்கர வாகனத்தைகூட வாங்கி முடியாத ஓர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.

தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அயராது உழைத்த தபேஷ் குமார், தற்போது அதற்கான பலனை எட்டியுள்ளார். ஆம், கடுமையான வறுமையில் வாடி வந்த தபேஷ் குமார், தன்னுடைய குடும்பத்தை எண்ணி வருந்தாமல் படிப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்தே, விரும்பிய பாடப்பிரிவான விமானம் சார்ந்த பொறியியல் பட்டப் படிப்பை அவர் தேர்ந்தெடுத்தார். தற்போது விமானியாகவும் அவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையிலேயே கடைசி கனவான ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் காரை அவர் வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த தகவலை வீடியோவாக ‘பைலட் பாய்’ என்னும் யுடியூப் சேனல் வழியாக அவர் வெளியிட்டிருக்கின்றார்.

இருங்க, இருங்க, விமானியா இருந்த இந்த விலையுயர்ந்த காரை வாங்க முடியுமா? இந்த கார் என்ன அவ்வளவு விலை குறைந்த மாடலா? என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழுந்திருக்கலாம். இதோ அதற்கான பதில், தபேஷ் குமார் எக்ஸ்ஜேஎல் காரை வங்கியது உண்மைதான். ஆனால், அதனை அவர் செகண்ட் ஹேண்ட் சந்தையில் இருந்தே வாங்கியிருக்கின்றார்.

எனவே, தபேஷ் குமார் ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் காருக்கு இரண்டாவது உரிமையாளர் ஆவார். இம்மாதிரியான கார்கள் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிற்கு வரும்போது ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், இந்த காரை எவ்வளவு தொகை கொடுத்து தபேஷ் வாங்கியிருக்கின்றார் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.

அதேசமயம், இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அதிக விலைக்கொண்ட மற்றும் ஆடம்பர ரக செடான் கார்களில் ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் செடான் கார் முன்னணி இடத்தில் உள்ளது. இது தொழிலதிபர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்ற மாடலாக காட்சியளிக்கின்றது.

தற்போது தபேஷ் வாங்கியிருக்கும் ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் செடான் காரில் 5.0 லிட்டர் பெட்ரோல் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. ஏனெனில் தற்போது இதன் புதிய வெர்ஷன் மாடலே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அது, பல கோடி ரூபாய்கள் மதிப்பில் காட்சியளிக்கின்றது.

இந்த காரின் எஞ்ஜின் மட்டுமின்றி இன்டீரியர் கேபினும் மிகப் பெரியதாக காட்சியளிக்கின்றது. இதனாலயே சொகுசு வசதியை வாரி வழங்கும் காராக இது இருக்கின்றது. எனவேதான், தொழிலதிபர்கள் பலர் தங்களின் நெடுந்தூர பயணங்களுக்க இக்காரை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த வி8 எஞ்ஜின் அதிகபட்சமாக 385 பிஎச்பி மற்றும் 625 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த திறனானது சாலையில் மணிக்கு 200-க்கும் அதிகமான கிமீ வேகத்தில் பயணிக்க உதவும். இத்தகைய அதி திறன் கொண்ட காரைதான் விமானி தபேஷ் குமார் தற்போது வாங்கியிருக்கின்றார்.