தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர் +2 தேர்வில் 1024 மதிப்பெண்கள்!!

762

தந்தையின் குடிப்பழக்கத்தால் நெல்லையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி தமிழகத்தின் பரபரப்பான செய்திகளுள் ஒன்றாக வெளியானது நெல்லை மாணவர் தற்கொலை சம்பவம். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் தினேஷ் நல்லசிவன். படிப்பில் சிறந்து விளங்கிய இவர் 10ஆம் வகுப்பில் 464 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 12ஆம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, முடிவுகளுக்காக காத்திருந்தார்.

அத்துடன் நீட் தேர்விற்கும் விண்ணப்பித்திருந்தார். இவரது தந்தை மாடசாமி குடிப்பழக்கம் உடையவர். தந்தையிடம் பலமுறை குடிப்பதை நிறுத்துமாறு தினேஷ் கூறிவந்துள்ளார். தந்தை திருந்தாததால் மனமுடைந்த தினேஷ், நெல்லை தெற்கு புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், இனிமேலாவது தினேஷ் தந்தை குடிக்காமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

தற்கொலை செய்யும் முன்பு அவர் எழுதியிருந்த கடிதத்தில், ‘அப்பா நான் தினேஷ் எழுதுறது. நான் செத்துபோனதுக்கு அப்பரமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதால் எனக்கு கொள்ளி வைக்காதே, மொட்டபோடாத. வெளிப்படையான சொன்னா, நீ எனக்கு காரியம் பண்ணாத. மணி அப்பாதான் பண்ணணும். இதுதான் என் ஆசை. அப்பதான் என் ஆத்மா சாந்தியடையும்.

குடிக்காத அப்பா இனிமேலாவது. அப்பதான் சாந்தி அடைவேன். இந்தியாவில் பிரதமர், தமிழகத்தில் முதலமைச்சர் இனிமேலாவது டாஸ்மாக் கடைகளை அடைக்கிறார்களா? என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தமிழகத்தில், பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. வழக்கம் போல் இல்லாமல் காலை 9.30 மணிக்கு இணைய தளத்தில் தேர்வு முடிகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் தேர்வு எழுதிய 8 லட்சத்து 60 ஆயிரத்து 634 பேரில், 91.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அந்த வகையில் தற்கொலை செய்துகொண்ட தினேஷ் எடுத்துள்ள மதிப்பெண், 1024 ஆகும். பாடம் வாரியாக, தமிழ் – 194, ஆங்கிலம் – 148, இயற்பியல் – 186, வேதியியல்-173, உயிரியல் – 129, கணிதம் – 194, மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

தினேஷை படிக்க வைத்த அவரின் சித்தப்பா மணி, இந்த முடிவுகளை பார்த்தார். தினேஷின் மதிப்பெண்களைக் கண்டு அவர் கண் கலங்கியது, அங்கிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.