தமிழன் அடித்த அடியை மறக்க முடியாது: கங்குலி!

687

இலங்கையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோல்வியின் தருவாயில் இருந்த இந்திய அணியை வெற்றி பெற வைத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியை யாரும் மறக்க முடியாது என்று கங்குலி கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி அணியில் இளம் வீரரான ரிசப் பாண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

11 போட்டிகளில் விளையாடியுள்ள ரிசப் பாண்ட 521 ஓட்டங்கள் குவித்து ஐபிஎல் தொடரின் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.அதில் தற்போது கலக்கி வரும் ரிசப் பாண்ட தெரிவு செய்யப்படாததால் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

இதையடுத்து ரிஷப் குறித்தும் அவர் ஏன் இப்போதைக்கு இந்திய அணியில் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறித்தும், இந்திய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் உள்ளவருமான கங்குலி கூறியுள்ளார்.

ரிஷப் இந்தியாவின் எதிர்காலம் என நினைக்கிறேன். அவருக்கு அந்த தகுதி இருக்கிறது. ரிஷப் மட்டுமல்ல, இஷான் கிஷனுக்கும் இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும். இன்னும் நிறைய காலம் இருக்கிறது அவர்களுக்கு. இன்னும் அவர்கள் முதிர்ச்சியடைய வேண்டும். எல்லாவற்றிற்கும் அவர்கள் பக்குவப்படும் நேரத்தில், தானாகவே வாய்ப்பு தேடி வரும்.

அதே சமயம் தற்போது இந்திய அணியில் டோனி உள்ளார். அவரின் ஆட்டமும் தற்போது மிக அற்புதமாக உள்ளது. இவருக்கு அடுத்த படியாக தினேஷ் கார்த்திக் உள்ளார்.

சமீபத்தில் முடிந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது தோல்வியில் இருந்த இந்திய அணியை அவர் தான் வெற்றி பெற வைத்தார், அவரின் அன்றைய ஆட்டத்தை மறக்கவே முடியாது.

இதனால் இளம் வீரர்கள் தங்களுக்கான சரியான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரான தினேஷ் கார்த்திக் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.