கோவை….
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வடமங்களக்கரை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (32). இதே பகுதியை சேர்ந்தவர் ஹேமசுதா (25). இவரது கணவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியனுக்கும் ஹேமசுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவரது காதல் விவகாரத்தை அறிந்த பாலசுப்பிரமணி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும், இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி பாலசுப்பிரமணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஹேமசுதாவை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில், பாலசுப்பிரமணி தாயை பார்க்க நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் பாலசுப்பிரமணியின் அண்ணன் பாலமுருகன் இருந்தார்.
அப்போது, அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், கத்தியை எடுத்து தம்பி என்றும் பாராமல் சரமாரியாக குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது அண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.