தர்மபுரி, அரூர் என்ற வன மாவட்டத்தில் அரூர் சுற்றுவட்டாரத்தில் மொரப்பூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டப்பட்டி பகுதியையொட்டி வனம் ஒன்று உள்ளது.குறித்த வனத்தில் இருந்து அவ்வப்போது மான், முயல், குரங்கு, பாம்பு உள்ளிட்டவை ஊருக்குள் படையெடுக்கும்.
மேலும், சேலம் வழியாக சென்னை செல்லும் வாகனங்கள், அரூர் வழியாக செல்வதால் விலங்குருகள் பல வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழும். அப்பகுதியில் தொடர்ந்து வழித்தவறி வரும் விலங்குகள் பிணமாகதான் செல்லும்.
அரூர்தீர்த்தமலை சாலையில், அம்பேத்கார் காலனி பகுதியில் நேற்றிரவு, தலைநசுங்கிய நிலையில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று இறந்து கிடந்தது.அதனருகில் 56 குட்டிகள் வளைந்து, நெளிந்தபடி கிடந்தன. அவற்றில் ஒரு சில பாம்புகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.
அங்குள்ள முட்புதரில் இருந்து வெளியேறி சாலையை கடக்க முயன்றபோது வாகனத்தில் அடிபட்டு பாம்பு இறந்திருப்பது தெரியவந்தது.பாம்பு கர்ப்பம் தரித்திருந்ததால் வாகனத்தில் அடிபட்டவுடன் அதன் வயிற்றில் இருந்த குட்டிகள் அனைத்தும் வெளியே வந்துள்ளது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், இறந்த பாம்பையும், குட்டிகளையும் மீட்டு சாலையோரம் வைத்திருந்தனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் அந்த குட்டிகள் அனைத்தையும் பொய்யப்பட்டி காப்புகாட்டிற்குள் கொண்டு விட்டனர்.
மக்கள் பார்வையில் அந்த பாம்பு குட்டிகள் பட்டதால் வனத்திற்குள் சென்றது. பாம்புகளை வைத்து வருவாய் ஈட்டுவோர் கண்ணில் சிக்கியிருந்தால் மொத்த குட்டிகளையும் வைத்து பணத்தை சம்பாதிக்கும் யுக்தியை மர்ம நபர்கள் கையாண்டிருப்பர் என அப்பகுதி மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.