நாமக்கல்…
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பொன்னேரிபட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள் மூதாட்டி. விவசாய வேலை செய்து வரும் இவருக்கு சண்முகம் என்ற மகனும், கோமதி என்ற மகளும் இருக்கின்றனர். திருமணம் முடிந்து பிள்ளைகள் தனித்தனி குடும்பமாக வசித்து வரும் நிலையில், நல்லம்மாளும், அவரது கணவர் சின்னசாமியும் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு சின்னசாமி உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், அவர் உயிரோடு இருக்கும் போதே மகன் சண்முகத்திற்கு நான்கரை ஏக்கர் விவசாய நிலத்தை எழுதி வைத்ததோடு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்து காட்டிலும், மேட்டிலும் கஷ்டப்பட்டு உழைத்து தான் சேர்த்த, 4லட்சம் ரூபாயை மூதாட்டி கடனாக கொடுத்திருந்ததோடு, நகைகளை விற்ற பணம் 3லட்சம் ரூபாயை வங்கியில் போடுவதற்காக வீட்டில் வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் நூறு நாள் வேலைக்குச் சென்று விட்டு டீ குடித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் வீட்டுக்கு அவரது மகனும், மருமகள் ஜானகியும் வந்து, வீட்டில் உள்ள 3லட்சம் ருபாய் பணத்தை தங்களுக்கு தருமாறு கேட்டுள்ளனர். மூதாட்டி பணம் தர மறுத்த நிலையில், முதலில் தகராறில் ஈடுபட்ட இருவரும் அவரை நடுரோட்டில் வைத்து தாக்கினர்.
மூதாட்டியின் தலைமுடியை பிடித்து, மகன் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளன. மருமகள் ஜானகி, மூதாட்டி வைத்திருந்த செல்போன், சாவி உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டார்.
இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே, அங்கு வந்த நாய் ஒன்று சண்முகத்தை பார்த்து வேகமாக குரைத்தது. இது பார்ப்பதற்கு மூதாட்டியை காப்பாற்ற நாய் பதறியடித்து ஓடி வந்தது போல் இருந்தது.
அந்த கிராமத்தில் வசித்து வரும் இந்த நாய்க்கு மூதாட்டி அடிக்கடி சாப்பாடு போடுவார் எனக் கூறப்படும் நிலையில், மூதாட்டியை காப்பாற்றும் நோக்கிலேயே சண்முகத்தை பார்த்து நாய் குரைத்ததாக அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
காயமடைந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கலிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மூதாட்டியை அவரது மகள் கோமதி உடனிருந்து கவனித்து வருகிறார். ஈ, எறும்பு அண்டாமல் தோளிலும், மார்பிலும் தூக்கி சுமந்து வளர்த்த தாயை, பணத்துக்காக மகன் நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்றது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆயுசுக்கும் கஷ்டப்பட்டு வளர்த்த மகன் நடுத்தெருவில் கைவிட்ட போதிலும், நன்றி மறக்காத ஐந்தறிவு ஜீவன் மூதாட்டியை காப்பாற்ற துடித்த காட்சிகள், மனிதர்கள் சிலரின் புத்தி எவ்வளவு குன்றியது என்பதை நெற்றி பொட்டில் அடித்தது போல் வெளிச்சம் போட்டு உணர்த்துகிறது.
ஈவு இரக்கமின்றி தாயை நடு ரோட்டில் வைத்து சண்முகம் அடித்துத் துன்புறுத்திய காட்சிகள் போலீசாரின் கவனத்துக்குச் சென்ற நிலையில், பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சண்முகம் கைது செய்யப்பட்டான். கொலை முயற்சி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைவது, பெண்ணை தகாத வார்த்தையில் பேசி கொடுமைப்படுத்துவது என்பன உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.