புதுக்கோட்டை….
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மருதாந்தலை பகுதியை சேர்ந்த துரைராஜ் – லீலாவதி தம்பதியின் மகன் சந்தோஷ்குமார். இவர், சிப்காட் பகுதியில் உள்ள சாக்கு நிறுவனத்தில் கூலிவேலை பார்த்து வந்தார். சந்தோஷ்குமார் சிறுவயதாக இருக்கும் போதே அவரது தந்தை வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். இதனால் வீட்டில் தாயும், மகனும் மட்டுமே வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தோஷ்குமார் மது குடிக்கவும், அடமானத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை மீட்கவும் பணம் தருமாறு தாய் லீலாவதியிடம் கேட்டுள்ளார். ஆனால் தாய் பணம் கொடுப்பதற்கு மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மகன் சந்தோஷ்குமார், தாய் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் லீலாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது உயிரிழந்த லீலாவதியின் மகன் மீது தீக்காயம் இருந்ததால், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருப்பினும், இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அப்துல்காதர் கடுமையான தீர்ப்பை அளித்தார்.
அதில் சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராத தொகையும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். தொடர்ந்து சந்தோஷ்குமார் 40 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்கும் வேண்டும் எனவும், அதற்கு முன்னதாக தண்டனையை குறைத்து சிறையில் இருந்து விடுவிக்க கூடாது எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மது அருந்துவதற்கு பணம் தராததால் தாயை தீ வைத்து எரித்து கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகாலம் ஆயுள்தண்டனை கோர்ட்டு வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.