திருநங்கையாக மாறிய மகன்… கேலி பேசிய சமூகத்துக்கு அஞ்சி தாயால் நேர்ந்த விபரீதம்!!

248

சேலம்…

சேலம் மாவட்டம் சூரமங்கலம் அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி. 10ஆண்டுகளுக்கு முன் கணவனை பிரிந்த உமாதேவியின் ஒரே மகன் பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு கிடைக்கும் வேலைகளை செய்து வந்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் தனது உடலில் பாலியல் ரீதியான மாற்றங்களை உணர்ந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவ்வப்போது தாயின் சேலையை எடுத்துக் கட்டிக் கொள்வதுமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உமாதேவி, கண்டித்த நிலையில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை வெளிக்காட்ட முடியாமல் புழுங்கிப் போன அந்த இளைஞன், ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறி பெங்களூரு சென்றிருக்கிறார். பின்னர், ஒரு மாதம் கழித்து அறுவை சிகிச்சை செய்யாமலேயே பெண் போல சிகை அலங்காரம் செய்து, நடை, உடையை மாற்றி வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அப்போதும், தன்னை ஏற்றுக் கொள்ள தனது தாய் தயராக இல்லை என்பதை தெரிந்து கொண்ட அவர், மற்ற திருநங்கைகளோடு சேர்ந்து வாழ்ந்து கொள்கிறேன் என கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் பெங்களூருவுக்கே சென்றிருக்கிறார்.

பின்னர், மகனை காணவில்லை என உமாதேவி அளித்த புகாரின் பேரில் சூரமங்கலம்போலீசார் இளைஞனை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, மேஜர் என்பதால் அவர் இஷ்டப்படியே நடந்து கொள்ளலாம் என நீதிபதி கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, தீபாவளி பண்டிகைக்காக பெங்களூருவில் இருந்து தாயை பார்க்க சொந்த ஊருக்கு வந்த இளைஞரை பார்த்து அக்கம்பக்கத்தினர் கேலி செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான உமாதேவி, தாம் வேலை செய்யும் ஹோட்டல் உரிமையாளர் வெங்கடேஷிடம் நடந்தவற்றையை கூறி யோசனை கேட்டிருக்கிறார்.

அதற்கு கை, காலை உடைத்து, வீட்டிலேயே உட்கார வைத்து கஞ்சி ஊத்து என வெங்கடேஷ் கூறியதின் பேரில், தனது மகனை ஆள் வைத்து அடிக்க துணிந்திருக்கிறார் உமாதேவி.

திட்டமிட்டபடி, கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்த அந்த இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதலில் மருத்துவர்கள் கேட்டபோது, பைக்கில் சென்றபோது கீழே விழுந்துவிட்டான், மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டான் என மாறி மாறி முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விசாரணையில், ஊரார் கேலி செய்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல், மகனை அடிக்கச் சொன்னதாகவும், அடி பலமாக பட்டு எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதாக உமாதேவி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனையடுத்து, உமாதேவி கைது செய்த போலீசார், கொலைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த ஹோட்டல் உரிமையாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

ஒரு பெண் ஆணாக மாறுவதும், ஆண் பெண்ணாக மாறுவதும் உடலளவில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றத்தைப் பொறுத்தே அமைகிறது.

அதனைப் புரிந்து கொண்டு அவர்களை வெறுத்து ஒதுக்காமல், அரவணைப்பதே சிறந்தது. திருநங்கைகளை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வு மேம்பாட்டிற்கும் அரசு சார்பில் எத்தனையோ திட்டங்கள் உள்ளன. அவை குறித்த விழிப்புணர்வை பரவலாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு…..