பிரியதர்ஷினி…
காதலனுக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள்,உள்ளனர் என்பது நண்பர்கள் மூலம் தெரியவந்ததும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
ஆவடி வெள்ளானூரில் ஏற்கனவே திருமணமானதை மறைத்து பணம் பறிக்க இளம் பெண்ணை ஏமாற்றி மீண்டும் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவடியை அடுத்த வெள்ளானூர் பிரியதர்ஷினி நகரில் வசித்து வரும் 26 வயது இளம்பெண் சென்னை போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.
இவருக்கு தன்னுடன் பணியாற்றிய வரும் சென்னை அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வில்லாண்டர் பெனட் ராயன் 29 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் காதலித்து வந்த இவர்களுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பெனட் ராயன் திருமண செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்று கூறி அந்தப் பெண்ணிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் தனது வங்கி கணக்கில் இருந்து மூன்றரை லட்சம் ரூபாயை நேரிடையாக அவருக்கு அனுப்பியுள்ளார்.
இதன்பிறகு தான் பெனட்ராயனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள்,உள்ளனர் என்பது நண்பர்கள் மூலம் தெரியவந்ததும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ராயன் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஏப்ரல் 13ம் தேதி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன்படி ராயனை அழைத்து போலீசார் விசாரித்த போது ஒரு லட்சம் ரூபாயை திரும்ப கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்ட போது அந்த பெண்ணுக்கு பெனட் ராயன் கொலை மிரட்டல் விடுத்ததுடன் ஆசிட் வீசி கொன்று விடுவேன் என எச்சரித்துள்ளார்.
இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி இளம்பெண் புகார் கொடுத்தார். ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகாரை அனுப்பி வைத்து விசாரிக்க உத்தரவிட்டனர். இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே ராயன் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.